அவைத் தலைவர் மீது ஹெட் ஃபோன் வீச்சு: தெலங்கானா பேரவையில் இருந்து 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நீக்கம்

தெலங்கானா மாநில பட்ஜெட் கூட்டத் தொடரின் கூட்டுக் கூட்டத்தில் மேலவைத் தலைவர் மீது 'ஹெட் ஃபோன்' வீசப்பட்டு,

தெலங்கானா மாநில பட்ஜெட் கூட்டத் தொடரின் கூட்டுக் கூட்டத்தில் மேலவைத் தலைவர் மீது 'ஹெட் ஃபோன்' வீசப்பட்டு, அவர் காயமுற்ற சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இருவர் பேரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 6 எம்எல்சிக்களும் பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநில பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சட்டப் பேரவை, மேலவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மன் உரையாற்றினார். அப்போது, விவசாயிகள் தற்கொலை, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஆளுநர் உரையின் நகலை கிழித்து, காகித பந்துகளாக உருட்டி அவையின் மையப்பகுதியை நோக்கி வீசினர். அப்போது, 'ஹெட் ஃபோன்' சாதனங்களும் தூக்கி வீசப்பட்டன. அவை, மேலவைத் தலைவர் கே.சுவாமி கௌடுவின் கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டது.
இதனிடையே, 'ஹெட் ஃபோன்' சாதனங்களை தூக்கி எறிந்தது, காங்கிரஸ் எம்எல்ஏ கோமட்டிரெட்டி வெங்கட ரெட்டி என்பது சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதையடுத்து, அவரையும் மற்றொரு காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.ஏ.சம்பத் குமாரையும் பேரவையில் இருந்து நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை, பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் டி.ஹரீஷ் ராவ் செவ்வாய்க்கிழமை கொண்டுவந்தார்.
அத்துடன், பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜனா ரெட்டி உள்பட மேலும் 11 எம்எல்ஏக்களை, பட்ஜெட் கூட்டத் தொடர் முடியும் வரை (மார்ச் 27) பேரவையில் இருந்து இடை நீக்கம் செய்வதற்கான மற்றொரு தீர்மானத்தையும் அவர் கொண்டு வந்தார்.
இரு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் அனைவரும் அவையில் இருந்து வெளியேறும்படி அவைத் தலைவர் மதுசூதனாச்சாரி உத்தரவிட்டார். ஆனால், அதனையேற்காத எம்எல்ஏக்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
கண்டனம்: சட்டப் பேரவையில் 'ஹெட் ஃபோன்' வீசப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் சந்திரசேகர் ராவ், 'அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளபோது, அமளியில் ஈடுபடுவது ஏன்? பேரவையின் மாண்பு சீர்குலைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார்.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், இதுதொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளதாகவும் அக்கட்சி தெரிவித்தது.
பாஜக கருத்து: இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் கிஷண் ரெட்டி கூறுகையில், 'பேரவையில் நடைபெற்ற சம்பவங்கள் துரதிருஷ்டவசமானவை. எனினும், பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஜனா ரெட்டி மீது நடவடிக்கை எடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com