உத்தரப்பிரதேசம் இடைத்தேர்தல்: கோரக்பூரில் பாஜக, பூல்பூரில் சமாஜவாதி முன்னிலை

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், பூல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம் இடைத்தேர்தல்: கோரக்பூரில் பாஜக, பூல்பூரில் சமாஜவாதி முன்னிலை


உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், பூல்பூர் மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை தொடங்கி 3 மணி நேரத்துக்குப் பிறகான நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கோரக்பூர் தொகுதியில் ஆளும் பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். அதே சமயம் பூல்பூர் தொகுதியில் சமாஜவாதி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

கோரக்பூரில் பாஜக வேட்பாளர் உபேந்திர தத் சுக்லா 1,666 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். பூல்பூரில் சமாஜவாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 3,600 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். இன்று மதியத்துக்கு மேல் வெற்றி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இத்தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பரம எதிரிகளான சமாஜவாதியும், பகுஜன் சமாஜும் கைகோத்திருப்பதால், தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

கோரக்பூர் தொகுதி பாஜக எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச முதல்வராக கடந்த ஆண்டு தேர்வானதைத் தொடர்ந்து, எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார். இதேபோல், துணை முதல்வராக தேர்வான கேசவ் பிரசாத் மௌர்யா, பூல்பூர் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார்.

இவ்விரு தொகுதிகளுக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத் தேர்தல் நடைபெற்றது. கோரக்பூரில் 47.45 சதவீதமும், பூல்பூரில் 37.39 சதவீத வாக்குகளும் பதிவாகின.

பாஜகவின் கோட்டையாக கருதப்படும் கோரக்பூரில் தொடர்ந்து 5 முறை யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றுள்ளார். தற்போது பாஜக, சமாஜவாதி, காங்கிரஸ் உள்பட 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பூல்பூரில் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தேர்தலில் போட்டியிடாத பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதியுடன் ஒரு உடன்பாட்டை மேற்கொண்டது. அதன்படி சமாஜவாதி வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு தெரிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com