எதிர்க்கட்சிகளிடையே நட்புறவு ஏற்படவே விருந்தளித்தார் சோனியா: காங்கிரஸ் தகவல்

அரசியலுக்காக இல்லாமல், எதிர்க்கட்சிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவே விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது' என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தில்லியில் சோனியா காந்தி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த விருந்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்.
தில்லியில் சோனியா காந்தி தனது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த விருந்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள்.

அரசியலுக்காக இல்லாமல், எதிர்க்கட்சிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவே விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது' என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், திமுக உள்ளிட்ட 20 எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தில்லியில் செவ்வாய்க்கிழமை விருந்து அளித்தார். இந்த நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸின் சுதீப் பந்தோபாத்யாய, திமுக சார்பில் கனிமொழி, சமாஜவாதியின் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஷ் சந்திர மிஸ்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.கே.ரங்கராஜன், முகமது சலீம், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ், மகள் மிஸா பாரதி, ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா தலைவர் பாபுலால் மராண்டி, ஜேஎம்எம் கட்சியின் ஹேமந்த் சோரன், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா தலைவர் ஜிதன்ராம் மாஞ்சி, ஆர்எல்டி கட்சித் தலைவர் அஜித் சிங், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, ஹிந்துஸ்தான் பழங்குடியினர் கட்சித் தலைவர் சரத் யாதவ், ஏஐயூடிஎஃப் கட்சித் தலைவர் பத்ருதீன் அஜ்மல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் தரப்பில் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத், அகமது படேல், மல்லிகார்ஜுன கார்கே, ரண்தீப் சிங் சுர்ஜேவாலா, ஏ.கே.அந்தோணி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா பங்கேற்றது வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் அக்கட்சிக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தபோதிலும் கர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்த காரணத்தால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று கருதப்பட்டது. எனினும், பகுஜன் சமாஜ் தனது பிரதிநிதியை அனுப்பியதோடு, மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பிலும் குபேந்தர் ரெட்டி விருந்தில் பங்கேற்றார்.
மோடி அரசில் இருந்து விலகியபோதிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கும் தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம், தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகளுக்கு இந்த விருந்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்படவில்லை என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. 
தில்லியில் சோனியாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலையொட்டி எதிர்க்கட்சிகளிடயே ஒற்றுமையை ஏற்படுத்தும் தொடக்கமாகக் கருதப்படுகிறது. விருந்து நிகழ்ச்சிக்குப் பின் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுர்ஜேவாலா, செய்தியாளர்களிடம் கூறியது:
அரசியலுக்காக இந்த விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகளிடையே நட்புறவை ஏற்படுத்தவே இது நடத்தப்பட்டது. நாடு பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு, நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வெளியே கொண்டுசெல்லப்பட்டுள்ள இந்த வேளையில், அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஒரு குடும்பம் போல் அமர்ந்து விவாதிக்கவே இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தேசிய நலன் சார்ந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும், எதிக்கட்சிகள் தரப்பில் தோழமையை மேம்படுத்தி கருத்துகளை பரிமாறிக் கொள்ளவும் தலைவர்கள் இங்கு ஒன்றுகூடினர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com