மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவைத் தலைவர் இருக்கைக்கு முன்பு அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.

எதிர்க்கட்சிகள் அமளி: 7-ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்

வங்கிக் கடன் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை

வங்கிக் கடன் முறைகேடு உள்ளிட்ட பிரச்னைகளை மையமாக வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து 7-ஆவது நாளாக முடங்கின.
இதனால் முக்கிய நிதி மசோதாக்களை மக்களவையில் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
அமளியுடன் தொடக்கம்: மக்களவை செவ்வாய்க்கிழமை கூடியதும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சி உறுப்பினர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு பிரச்னையை எழுப்பினர். அதே நேரத்தில் அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தெலுங்கு தேசம் எம்.பி.க்கள் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் அவையை ஒரு மணி நேரம் ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியபோதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து பல்வேறு விவகாரங்களை மையமாக வைத்து பிரச்னை எழுப்பினர். இதையடுத்து அவையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பிற்பகலிலும் இதே நிலை நீடித்தது. இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் இருக்கை மீது ஏறி நின்று சில புகைப்படங்களை காட்டி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், அவையை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் செவ்வாய்க்கிழமை பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த நிதி மசோதாக்களையும், துணை நிலை மசோதாக்களையும் தாக்கல் செய்வதாக இருந்தது. அவையில் பிரச்னை நிலவியதால் அந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.
மாநிலங்களவையும் முடக்கம்: மாநிலங்களவையிலும் இதே பிரச்னை எதிரொலித்தது. எனவே, அவையை முதலில் சுமார் 15 நிமிடங்களுக்கு அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார். பின்னர் அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
இதற்கு நடுவே பேசிய வெங்கய்ய நாயுடு, 'எதிர்க்கட்சிகள் எழுப்பும் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் அவையில் பேசலாம். வங்கி முறைகேடு குறித்து விதி 176-இன் கீழ் விவாதிக்கலாம். எனவே, அவையில் போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை' என்றார். ஆனால், 'வாக்கெடுப்புடன் தீர்மானம் கொண்டுவரக் கூடிய விதி எண் 168 மற்றும் 169-இன் கீழ் விவாதம் நடத்த வேண்டும்' என்று காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். இது ஏற்கப்படாததால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். பிற்பகலில் மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தலைமையில் அவை கூடியபோதும் இதே நிலைதான் நீடித்தது. 'ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்' என்ற வாசக அட்டைகளைக் காட்டி போராட்டம் நடத்திய தெலுங்கு தேசம் எம்.பி.க்களை, விதிகளை மீறுவதாக கடுமையாக கண்டித்த அவர் அவையை மீண்டும் ஒத்தி வைத்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் பஞ்சாப் நேஷனல் வங்கிக் கடன் முறைகேடு, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து, காவிரிப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் நாடாளுமன்றம் தொடர்ந்து 7-ஆவது நாளாக முடங்கியுள்ளது.
சிதம்பரம் குறித்த கருத்தால் சர்ச்சை: முன்னதாக, மாநிலங்களவையில் உள்துறை விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிக்க காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரத்தை வெங்கய்ய நாயுடு அழைத்தார். அப்போது, ப.சிதம்பரம் அவையில் இல்லை. அப்போது, 'அவர் சிறைக்கு சென்றிருக்கலாம்' என்று ஆளும் கட்சி வரிசையில் இருந்து ஒரு எம்.பி. கிண்டலாக கூறினார். இதற்கு, காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதையடுத்து, 'உறுப்பினர்கள் யாரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு கருத்து தெரிவிக்கக் கூடாது' என்று கண்டித்த வெங்கய்ய நாயுடு, இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பினர் கூறியதும் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்றும் தெரிவித்தார்.
தனது மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்பான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு ப.சிதம்பரம் சென்றதால், அவர் அவைக்கு வரவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com