சத்தீஸ்கர்: நக்ஸலைட்டுகள் தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் சாவு: ராஜ்நாத் சிங் கண்டனம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
சத்தீஸ்கர்: நக்ஸலைட்டுகள் தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் சாவு: ராஜ்நாத் சிங் கண்டனம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது:
சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம்-பலோடி சாலையில் சிஆர்பிஎஃப் படையின் 212ஆவது படைப்பிரிவு வீரர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் சென்ற கண்ணிவெடி தகர்ப்பு வாகனம், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டில் சிக்கி தூக்கி வீசப்பட்டது.
இதில் அந்த வாகனம் சுக்கு நூறாக நொறுங்கியது. வாகனத்தில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர்கள் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 2 வீரர்களும், ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு கூடுதல் பாதுகாப்புப் படை வீரர்களை சிஆர்பிஎஃப் அனுப்பி வைத்துள்ளது.
முன்னதாக, இதே படைப்பிரிவு வீரர்களுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. அந்தச் சண்டை முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், வாகனத்தில் வீரர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வாகனத்தை நக்ஸலைட்டுகள், சக்திவாய்ந்த வெடிகுண்டு மூலம் தகர்த்துள்ளனர்.
சுக்மா மாவட்டத்திலுள்ள பெஜி பகுதியில் பாதுகாப்புப் படையினர் மீது நக்ஸலைட்டுகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதேபோல், சுக்மாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நக்ஸலைட்டுகள் நடத்திய மற்றோர் தாக்குதலில் 25 மத்திய துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.
பெஜி தாக்குதல் சம்பவம் நடைபெற்று ஓராண்டு கடந்துள்ள நிலையில், அதேபோன்ற தாக்குதலை நக்ஸலைட்டுகள் தற்போது மீண்டும் நடத்தியுள்ளனர். இதனால், சத்தீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜ்நாத் சிங் கண்டனம்
சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவுகளில், 'சத்தீஸ்கர் மாநிலம், சுக்மாவில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் ஆழ்ந்த கவலையை அளிக்கிறது; நாட்டுக்கு சேவையாற்றும் நேரத்தில் உயிரைத் துறக்கும் ஒவ்வொரு பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் தலை தாழ்த்து நான் மரியாதை செலுத்துகிறேன். சுக்மா தாக்குதலில் பலியானோரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தோர் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் நக்ஸலைட் தாக்குதல் சம்பவத்துக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com