சத்தீஸ்கர் நக்ஸல் தாக்குதல்: மத்திய அரசு மீது காங்கிரஸ் விமர்சனம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 9 பேர் பலியான சம்பவத்தை முன்னிறுத்தி மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல் தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் 9 பேர் பலியான சம்பவத்தை முன்னிறுத்தி மத்திய பாஜக அரசை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
அரசின் தவறான கொள்கைகள் காரணமாக நாட்டின் பாதுகாப்பு சூழல் மோசமான நிலையில் இருப்பதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. நக்ஸல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்த கருத்துகள் பொய்யானவை என்பது தற்போது நிரூபணமாகிவிட்டன என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் மீது நக்ஸலைட்டுகள் திடீரென செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இதில் 9 வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆண்டும் சுக்மா மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 வீரர்கள் உயிரிழந்தனர். அந்தச் சம்பவத்தில் இருந்து மத்திய அரசு எந்தப் படிப்பினையும் கற்கவில்லை. அதனால்தான் அதேபோன்றதொரு நிகழ்வு மீண்டும் அரங்கேறியுள்ளது.
மத்திய பாஜக அரசின் இலக்கற்ற, பொறுப்பற்ற கொள்கைகள் காரணமாக நாட்டின் பாதுகாப்பு நிலை மோசமடைந்துள்ளது. ஆனால், அதனை ஒப்புக்கொள்ளாமல் நக்ஸல் பிரச்னைக்கு முடிவு கட்டிவிட்டதாக பாஜக ஆட்சியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
தற்போது அதைப் பொய்யாக்கும்விதமாக இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு மட்டும் நாட்டில் 23 நக்ஸல் தாக்குதல் நடந்துள்ளன. அவற்றில் பாதுகாப்புப் படை வீரர்கள் 94 பேரும், பொது மக்கள் 121 பேரும் பலியாகினர். அதேபோன்று ஜம்மு-காஷ்மீரிலும் 53 பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளன. அதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com