ஜெயா பச்சன் குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் நரேஷ் அகர்வால்

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக, மாநிலங்களவை எம்.பி.யும், பாஜக மூத்த தலைவருமான நரேஷ் அகர்வால் வருத்தம் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக, மாநிலங்களவை எம்.பி.யும், பாஜக மூத்த தலைவருமான நரேஷ் அகர்வால் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பாஜகவில் திங்கள்கிழமை இணைந்த நரேஷ் அகர்வால், அதற்கு முன்பு சமாஜவாதி கட்சியில் இருந்தார். அக்கட்சியின் சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக அவர் தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்தப் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் (ஏப்ரல்) நிறைவடைகிறது. 
இதையடுத்து, சமாஜவாதி கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட அவர் விரும்பினார். ஆனால், அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. மாறாக, ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு அக்கட்சிவாய்ப்பளித்தது.
இதனால் அதிருப்தியடைந்த நரேஷ் அகர்வால், சமாஜவாதி கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தார். இதைத் தொடர்ந்து, ஜெயா பச்சனை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளை அவர் வெளியிட்டார். திரைப்படங்களில் நடனமாடவும், நடிக்கவும் செய்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்று நரேஷ் அகர்வால் விமர்சித்தார். இந்தக் கருத்துகளுக்கு, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டனர்.
இதையடுத்து தனது கருத்துகளுக்காக நரேஷ் அகர்வால் செவ்வாய்க்கிழமை வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து தில்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கமில்லை; என்னுடைய கருத்துகள் யாருடைய உணர்வையாவது காயப்படுத்தியிருந்தால், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
அகிலேஷ் யாதவ் கண்டனம்: இந்நிலையில், ஜெயா பச்சன் குறித்து நரேஷ் அகர்வால் தெரிவித்த கருத்துகளுக்கு சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில், 'பெண்களையும், திரைப்பட துறையையும் நரேஷ் அகர்வால் அவமதித்து விட்டார். பெண்களுக்கு பாஜக உண்மையில் மரியாதை அளிக்குமானால், நரேஷ் அகர்வாலுக்கு எதிராக அக்கட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com