நாடாளுமன்ற முடக்கத்துக்கு காங்கிரஸ்தான் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

நாடாளுமன்ற முடக்கத்துக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி. 
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர் அத்வானி. 

நாடாளுமன்ற முடக்கத்துக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
தில்லியில் பாஜக நாடாளுமன்ற கட்சி குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது:
நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கி வருவதற்கு, காங்கிரஸ்தான் காரணம். இந்த முட்டுக்கட்டையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும், காங்கிரஸை தனிமைப்படுத்துவது குறித்தும் பிற அரசியல் கட்சிகளுடன் மத்திய அரசு பேசி வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளிக்கிறார். அவரது விருந்து அரசியலானது, விருந்துக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும். பிரதமர் மோடி எப்போதும் வெற்றியாளராகத்தான் இருப்பார். மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரும்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும், நாடாளுமன்றத்துக்கு வெளியேதான் ஜனநாயகம் குறித்து பேசுகின்றனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அதுபோல் அவர்கள் செயல்படுவதில்லை. நாடாளுமன்ற இரு அவைகளைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்களுக்கும், அடுத்த 3 நாள்களுக்கு அவையில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரு அவைகளிலும் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் வகையில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் பிராந்திய அரசியல் கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது. 
இந்த கூட்டணியின் மூலம், தேசிய ஜனநாயகக் கூட்டணியானது (என்டிஏ), தேசிய ஜனநாயகக் கூட்டணி ப்ளஸ் ஆக உருவெடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தனிமைப்பட்டு கொண்டே இருக்கிறது.
நாட்டில் கடந்த 1970ஆம் ஆண்டுகளில் அப்போதைய இந்திரா காந்தி அரசால் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் அத்துமீறலில் ஈடுபட்டது. அக்காலக்கட்டத்தில், நாடு முழுவதும் தணிக்கையில் காங்கிரஸ் அரசு ஈடுபட்டது. நாடாளுமன்ற பதவிக்காலத்தை 5 ஆண்டில் இருந்து 6 ஆண்டாக அதிகரித்தது. எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தது. 
ஜனநாயகத்துக்கு எதிராக அதே மனநிலையில்தான், அக்கட்சி இன்னமும் உள்ளது.
நாடாளுமன்றத்தை காங்கிரஸ் கட்சி செயல்பட விடுவதில்லை. ஆனால், நாடாளுமன்றம் தொடர்ந்து செயல்படச் செய்வதுதான் மத்திய அரசின் பணியாகும். இதைச் செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) நடந்துள்ள மோசடி குறித்து விவாதம் நடத்துவதில் இருந்து காங்கிரஸ் தப்பியோடுகிறது. அப்படி விவாதம் நடத்தப்பட்டால், தங்கள் தரப்பில் செய்யப்பட்டுள்ள தவறுகள் வெளிச்சத்துக்கு வந்துவிடும் என காங்கிரஸ் அஞ்சுகிறது என்றார் அனந்த் குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com