ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பில் குறைபாடு: சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு

ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில்

ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாக, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு குறைபாடு காரணமாக கடந்த 2014 முதல் 2017 வரை 16 ரயில் விபத்துகள் நேர்ந்துள்ளன.
நாடு முழுவதும் தேர்வு செய்யப்பட்ட 37 வழித்தடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தண்டவாளப் பராமரிப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவது கண்டறியப்பட்டது. தண்டவாளப் பராமரிப்புக்கான திட்டமிடல், சோதனை நடவடிக்கைகள், தண்டவாள விரிசல்களை கண்டறிவதில் அதிநவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவது என பல்வேறு நிலைகளில் குறைபாடுகள் நிலவுகின்றன.
வடக்கு மத்திய ரயில்வே மண்டலத்திலும் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்திலும் பராமரிப்புத் திட்டங்கள் வகுக்கப்படவில்லை. தென்கிழக்கு ரயில்வே மண்டலத்தில் தண்டவாளச் சோதனை நடவடிக்கைகள் முறையாக நடைபெறவில்லை.
தண்டவாளப் பராமரிப்பு பணி ஊழியர்களுக்கு தொலைதொடர்புக் கருவிகள் வழங்கப்படவில்லை. மேலும், அதிநவீன இயந்திரங்களின் மூலம் தண்டவாளச் சோதனை பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற விதிமுறையும் பின்பற்றப்படவில்லை.
இதுதவிர, தண்டவாளப் பராமரிப்புப் பணியாளர்கள் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தேவை அதிகமுள்ள நகரப் பகுதிகளில் இப்பணியாளர்கள் குறைவான எண்ணிக்கையிலும், தேவை குறைந்த தொலைதூர பகுதிகளில் பணியாளர்கள் அதிக எண்ணிக்கையிலும் உள்ளனர்.
இதனை சரிப்படுத்துவதுடன், தண்டவாளப் பராமரிப்பு, கண்காணிப்புக்கான ஒருங்கிணைந்த செயல்திட்டத்தை அனைத்து ரயில்வே மண்டலங்களும் உருவாக்க வேண்டும். புதிய தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரயில்வே துறைக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் இணைத்து ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நடைமுறை அறிமுகப்பட்டது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பொது பட்ஜெட்டில், ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு, ஆய்வு, பழுதுபார்ப்பு உள்பட விபத்து தவிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.7,267 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இத்தொகை, முந்தைய ஆண்டைக் காட்டிலும் ரூ.1933 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com