27 ஆண்டுகள் இந்தியாவில் இருந்த பாகிஸ்தானியர் நாடுகடத்தப்பட்டார்

இந்தியாவில் சட்டவிரோதமாக கடந்த 27 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

இந்தியாவில் சட்டவிரோதமாக கடந்த 27 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 37 வயது மதிக்கத்தக்க நபர் தாய்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிள் சிலர் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தின் மும்பை அருகே ஆன்டாப் ஹில் பகுதியில் வசித்து வந்தவர் சிராஜ் கான். இவர் 10 வயதாக இருக்கும்போது கவனக் குறைவால் இந்திய எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகத் தெரிகிறது. இங்கு, இந்தியப் பெண்ணையும் அவர் திருமணம் செய்துகொண்டு 3 குழந்தைகளுக்கு தந்தையுமானார். இந்நிலையில், கடந்த 2009-ஆம் ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு செல்ல திட்டமிட்டார். அப்போது, சொந்த கிராமத்துக்கு செல்ல உதவுமாறு காவல் துறை அதிகாரிகளை அவர் அணுகியபோது, விசாரணையில் பல ஆண்டுகளாக இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 6 மாத தண்டனைக்கு பிறகு வெளியே வந்துவிட்டார். எனினும், வெளிநாட்டுச் சட்டத்தின்கீழ் அவரை குற்றவாளி என்று கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்துடன், அவரை தாய்நாட்டுக்கு திரும்பி அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தியப் பிரஜையாக தன்னை அறிவிக்க வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகத்திலும் அவர் விண்ணப்பித்துள்ளார்.
கணவரை நாடு கடத்தக் கூடாது என்று மனைவியும் மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், நாடு கடத்தப்படுவதை தடுக்க இயலாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.
சிராஜ் கானை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பவது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு மேற்கொண்டது. பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்நாட்டு அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கிடைத்ததை அடுத்து, அவர் அந்நாட்டு அதிகாரிகளிடம் கடந்த 10-ஆம் தேதி ஒப்படைக்கப்பட்டார். அவரது மனைவி பந்த்ரா ரயில் நிலையம் வரை அவருடன் வந்து செல்லிடப்பேசியில் புகைப்படங்களை எடுத்துக்கொண்டு கண்ணீர் மல்க வீடு திரும்பினார்.
சிராஜ் கான், பாகிஸ்தானில் கடவுச்சீட்டு பெற்றுகொண்டு உரிய ஆவணங்களுடன் அவரது மனைவி, குழந்தைகளை இந்தியா வந்து சந்திக்கலாம் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சூழ்நிலையில், கணவரை நாடு கடத்தும் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் மனைவி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com