8-ஆவது நாளாக அமளி நீடிப்பு: மக்களவையில் விவாதமின்றி நிறைவேறியது பட்ஜெட்!

2018-19ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், மக்களவையில் எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதுபோல் எவ்வித விவாதமின்றி பட்ஜெட்
மக்களவையில் புதன்கிழமை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் இருக்கை முன் திரண்டு கோஷமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
மக்களவையில் புதன்கிழமை அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனின் இருக்கை முன் திரண்டு கோஷமிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

2018-19ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், மக்களவையில் எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதுபோல் எவ்வித விவாதமின்றி பட்ஜெட் நிறைவேற்றப்படுவது, அண்மைக் காலங்களில் இதுவே முதல் முறையாகும்.
இதனிடையே, எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் புதன்கிழமை 8-ஆவது நாளாக ஒத்திவைக்கப்பட்டன.
2018-19ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நிறைவுற்று, 2-ஆவது அமர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது. 
ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) மோசடி, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்ந்து முடங்கியுள்ளன.
இந்நிலையில், மக்களவை புதன்கிழமை கூடியபோது, முக்கியத்துவம் வாய்ந்த நிதி மசோதாவையும், அடுத்த நிதியாண்டில் ரூ.89.25 லட்சம் கோடிக்கான செலவுத் திட்டங்கள் அடங்கிய துணை மானிய கோரிக்கை மசோதாவையும் எவ்வித விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்ற அனுமதிக்க வேண்டும் என்று அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார் கோரிக்கை வைத்தார். அதனை சுமித்ரா மகாஜன் ஏற்றுக் கொண்டார்.
இதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பட்ஜெட் கூட்டத் தொடர் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் நிலையில், நிதி மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றக் கூடாது என்று அவைத் தலைவரிடம் அக்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதனிடையே, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிர சமிதி, ஒய்ஆர்எஸ் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவையை மதியம் 12 மணி வரை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
நிறைவேறியது பட்ஜெட்: பின்னர் அவை கூடியபோது, 21 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதாவும், துணை மானிய கோரிக்கை மசோதாவும் குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால், இரு மசோதாக்களும் எளிதாக நிறைவேறின. 
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து, அவையை நாள் முழுக்க ஒத்திவைப்பதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
மேற்கண்ட மசோதாகள் நிறைவேறியுள்ளதன் மூலம் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் 2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துள்ளது. மக்களவையில் எவ்வித விவாதமும் இல்லாமல் பட்ஜெட் நிறைவேற்றப்படுவது அண்மைக்காலங்களில் இதுவே முதல்முறையாகும். கடைசியாக கடந்த 2013-14ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், அதற்கு முன்பு 2003-04ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டும் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன.
மாநிலங்களவையில்...: மாநிலங்களவை புதன்கிழமை கூடியபோது, பல்வேறு பிரச்னைகளை எழுப்பி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவின் இருக்கை முன்பு திரண்டு, உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தலைமையில் மீண்டும் அவை கூடியபோது, மக்களவையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்ட குறிப்பை, மாநிலங்களவைச் செயலர் வாசித்தார். இதன் மூலம், நிதி மசோதாவும், துணை மானிய கோரிக்கை மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட விவரம் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 
எனினும், தொடர்ந்து அமளி நீடித்ததால், அவை நடவடிக்கைகள் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டன. முன்னதாக, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் வி.பி.எம்.சாமி, பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
சத்தீஸ்கரில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த துணை ராணுவப் படையினருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
நிதி மசோதாவைப் பொருத்தவரை, மக்களவையில் நிறைவேற்றப்பட்ட பின், மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கு விவாதம் நடத்தி, 14 தினங்களுக்குள் மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்க வேண்டும். 
இல்லையெனில் மாநிலங்களவையின் ஒப்புதல் பெறப்பட்டதாகவே கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com