தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம்: சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் தேவைப்பட்டால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம்: சந்திரபாபு நாயுடு

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரும் விவகாரத்தை, நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) எம்.பி.க்கள் தீவிரமாக எழுப்பி வருகின்றனர். சிறப்பு அந்தஸ்து அளிக்கக்கோரும் கோரிக்கை குறித்தும், வருவாய் பற்றாக்குறை ஆந்திரத்துக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றுவது தொடர்பாகவும் அக்கட்சி எம்.பி-க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், அக்கட்சியைச் சேர்ந்த அசோக் கஜபதி ராஜு, ஒய்.எஸ். செளதரி ஆகியோர் மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜிநாமா செய்தனர்.

அதுமட்டுமல்லாமல் கூட்டணி கட்சியான தங்கள் கட்சியின் உறுப்பினர்களை சந்திக்க மறுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ஒய்எஸ்ஆர் கட்சி உறுப்பினர்களைச் சந்தித்தார். இவ்விவகாரம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே பாஜகவுடன் யார் கூட்டணியில் உள்ளனர் என்பதை அக்கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் காட்டமாக விமர்சித்து, தனக்கு ஆந்திர மக்களின் நலன்தான் முக்கியம் என்று கூறினார்.

இந்நிலையில், ஆந்திராவுக்கு அந்தஸ்து வழங்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக ஆந்திர மாநில எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார். 

மேலும் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டி காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி போன்ற முக்கியத் தலைவர்களைச் சந்தித்து ஒய்எஸ்ஆர் உறுப்பினர் யூ.வி.சுப்பா ரெட்டி ஆதரவு திரட்டினார். இதையடுத்தும் மத்திய அரசு ஆந்திர மாநிலத்தை புறக்கணித்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி ராஜிநாமா செய்வார்கள் என்றும் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் தெரிவித்ததாவது:

தேவைப்பட்டால் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்போம். இதை யார் செய்தார்கள் என்பது எங்களுக்கு முக்கியமில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையிலான முதலாவது ஆட்சியின்போதும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைத்து செயல்பட்டது. அப்போதையப் பிரதமர் திரு.வாஜ்யாப் அவர்கள் எங்களுக்கு மத்திய அமைச்சரவையில் 6 இடங்களை வழங்க முன்வந்தார். ஆனால், பதவிகளுக்கு நாங்கள் ஆசைப்படவில்லை. சிறந்த கூட்டணி கட்சியாக விளங்கினோம்.

மத்திய அரசின் ஒவ்வொரு திட்டம் தொடர்பாகவும் வாஜ்பாய் எங்களுடன் ஆலோசனை நடத்துவார். குறிப்பாக தங்க நாற்கர சாலை திட்டம் எங்களுடைய ஆலோசனையின் பேரில் செயல்படுத்தப்பட்டதுதான் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com