அதீத நம்பிக்கையே தோல்விக்கு காரணம்!

உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் பாஜகவுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்
அதீத நம்பிக்கையே தோல்விக்கு காரணம்!

உத்தரப் பிரதேச இடைத்தேர்தல் பாஜகவுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என அதீத நம்பிக்கை கொண்டு செயல்பட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகளானது கட்சிக்கு புதிய படிப்பினையைத் தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு தனது எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதனால் கோரக்பூர் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியாவும் எம்.பி. பதவியைத் துறந்ததால் பூல்பூர் தொகுதியும் காலியானது. இதையடுத்து, அவ்விரு தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
பாஜக சார்பில் கோரக்பூரில் உபேந்திரதத் சுக்லாவும், பூல்பூரில் கெளசலேந்திர சிங்கும் போட்டியிட்டனர். சமாஜவாதி கட்சி தரப்பில் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பிரவீண் நிசாத் ஆகியோர் களமிறங்கினர். சமாஜவாதி கட்சிக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆதரவளித்தது. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.
பாஜகவை விட அதிக வாக்குகள் பெற்று இரு தொகுதிகளிலும் சமாஜவாதி வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். இது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதுதொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமாஜவாதி கட்சியும், பகுஜன் சமாஜும் தேர்தலில் இணைந்து களமிறங்கின. அவ்விரு கட்சிகளின் கூட்டணி பலத்தை நாங்கள் சரிவர உணரவில்லை. மேலும், வெற்றி எங்களுக்குத்தான் என்ற அதீத நம்பிக்கையும் கொண்டிருந்தோம். அதன் காரணமாகவே நாங்கள் தோல்வியைத் தழுவியிருக்கிறோம். எவ்வாறாயினும், மக்களின் தீர்ப்பை மனதார ஏற்றுக் கொள்கிறோம். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
இந்தத் தேர்தல் முடிவுகளானது பாஜகவுக்கு படிப்பினையைத்தந்துள்ளது. அதுகுறித்து சுயபரிசோதனை மேற்கொள்வோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com