இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை சிபிஐ விசாரணைக்கு இடைக்காலத் தடை: கேரள உயர் நீதிமன்றம்

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு, கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பி. கேமல் பாஷா தலைமையிலான ஒரு நீதிபதி அமர்வால் கடந்த 7ஆம் தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது, கொலை குறித்து சிபிஐ விசாரணைக்கு நீதிபதி பாஷா உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து,கேரள உயர் நீதிமன்றத்தில் அந்த மாநில அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், 'தடயவியல் அறிக்கையை கவனத்தில் கொள்ளாமல் அந்த அமர்வு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த விவகாரத்தில் கேரள போலீஸார் நேர்மையாக விசாரித்து வருகின்றனர். 11 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். அதுபோல், அவர்களது பதில் கேட்கப்படாமலே, ஒரு நபர் நீதிபதி அமர்வு தனது உத்தரவை வெளியிட்டுள்ளது. கொலை சம்பவம் நடந்து 3 வாரங்களில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அந்த அமர்வின் உத்தரவானது, இயற்கை நீதி, உச்ச நீதிமன்றத்தால் வகுக்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிரானது ஆகும்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மேல்முறையீட்டு மனு, கேரள உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அந்தோணி டொமினிக், நீதிபதி டாமா சேஷாத்ரி நாயுடு ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசின் மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க ஏதுவாக, சிபிஐ விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கண்ணனூர் மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியான சுஹைப் என்பவர் கடந்த மாதம் 12ஆம் தேதி மர்மக் கும்பலால் வெடிகுண்டுகள் வீசி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கேரளத்தை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com