உ.பி., பிகார் இடைத்தேர்தலில் பாஜக அதிர்ச்சித் தோல்வி

உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பூல்பூர், கோரக்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற களிப்பில் சமாஜவாதி கட்சி வேட்பாளர்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பூல்பூர், கோரக்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற களிப்பில் சமாஜவாதி கட்சி வேட்பாளர்

இரு தொகுதிகளிலும் சமாஜவாதி அமோக வெற்றி; ஒரு தொகுதியை ஆர்ஜேடி கைப்பற்றியது
உத்தரப் பிரதேசம், பிகார் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிர்ச்சித் தோல்வி அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 மக்களவைத் தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்ட சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றுள்ளது. 
பிகாரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், 2 பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், ஒரு மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் (ஆர்ஜேடி), ஒரு பேரவைத் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
உத்தரப் பிரதேசத்தில்...: உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவும், சமாஜவாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தனித்தனியே வேட்பாளர்களைக் களமிறக்கி இருந்தன. சமாஜவாதி கட்சிக்கு மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆதரவளித்தது.
உத்தரப் பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற பிறகு தனது எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தார். இதனால் கோரக்பூர் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மெளரியாவும் எம்.பி. பதவியைத் துறந்ததால் பூல்பூர் தொகுதியும் காலியானது. இதையடுத்து, அவ்விரு தொகுதிகளுக்கும் அண்மையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, கடந்த 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் புதன்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், கோரக்பூர் தொகுதியில் சமாஜவாதி கட்சி வேட்பாளர் பிரவீண் குமார் நிஷாத் 21,961 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பிரவீண் குமாருக்கு 4,56, 437 வாக்குகளும், பாஜக சார்பில் போட்டியிட்ட உபேந்திர தத் சுக்லாவுக்கு 4,34,476 வாக்குகளும் கிடைத்தன. காங்கிரஸ் வேட்பாளர் சரிதா கரீம் 18,830 வாக்குகள் பெற்று 3-ஆவது இடத்தைப் பிடித்தார்.
5 முறை பாஜக வென்ற தொகுதி: இடைத்தேர்தலில் சமாஜவாதி கட்சி கைப்பற்றியுள்ள கோரக்பூர் மக்களவைத் தொகுதி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகும். அந்தத் தொகுதியில் இருந்துதான் முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 5 முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் பெரும்பான்மையாக வசித்து வரும், இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், முஸ்லிம் சமூகத்தினர், தலித் சமூகத்தினர் ஆகியோர் சமாஜவாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்து வந்தனர். இந்நிலையில், அவ்விரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்தித்தது வெற்றியை உறுதி செய்துள்ளது.
பூல்பூர் மக்களவைத் தொகுதியில், சமாஜவாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கெளசலேந்திர சிங் படேலை விட 59,613 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
சமாஜவாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 3,42,796 வாக்குகளையும், கெளசலேந்திர சிங் படேல் 2,83,183 வாக்குகளையும் பெற்றுள்ளனர். சுயேச்சை வேட்பாளரான அட்டிக் அகமது 48,087 வாக்குகளைப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் மணீஷ் மிஸ்ரா 19,334 வாக்குகள் பெற்று, 4-ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.


பிகாரில்... : பிகார் மாநிலத்தில் அராரியா மக்களவைத் தொகுதியில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் போட்டியிட்ட சர்ஃப்ராஸ் ஆலம், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரதீப் குமார் சிங்கை விட கூடுதலாக 61,998 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல், ஜெகநாபாத் சட்டப் பேரவைத் தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட அபிராம் சர்மாவை, ராஷ்ட்ரீய ஜனதா தள வேட்பாளர் குமார் கிருஷ்ண மோகன் 35,036 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
இந்நிலையில், பாஜகவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, பபுவா சட்டப் பேரவைத் தொகுதியில் அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்தத் தொகுதியில், பாஜக வேட்பாளர் ரிங்கி ராணி, காங்கிரஸ் வேட்பாளர் சாம்பு சிங் படேலை 15,490 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பிகார் மாநிலத்தில் பாஜக கூட்டணியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இணைந்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும்.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: இதனிடையே, வாக்கு எண்ணிக்கை மையத்தில், கோரக்பூர் தொகுதியின் வாக்குகள் எண்ணப்பட்ட நேரத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது என்று சமாஜவாதி கட்சியின் மாநிலத் தலைவர் நரேஷ் உத்தம் குற்றம் சாட்டினார்.
'முதல்வரின் நெருக்கடிக்கு பணிந்து, வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் மையத்தில் இருந்த சமாஜவாதி முகவர்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றியது; அங்கு திரண்டிருந்த பொதுமக்களை தடியடி நடத்தி போலீஸார் விரட்டினர்' என்றும் அவர் குற்றம் சாட்டினார். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.

மக்களின் தீர்ப்பை ஏற்கிறேன் 
- யோகி ஆதித்யநாத்

பாஜகவுக்கு எதிராக மக்கள் கோபம் 
- ராகுல் காந்தி

தொடங்கிவிட்டது ஒரு கட்சியின் (பாஜக) முடிவு 
- மம்தா

மாயாவதிக்கு நன்றி
- அகிலேஷ்

உண்மைக்கு கிடைத்த வெற்றி 
- லாலு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com