சத்தீஸ்கர் நக்ஸலைட் தாக்குதல் புலனாய்வுத் துறை தோல்வியடையவில்லை: மத்திய அரசு

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட் தாக்குதல் சம்பவத்தை வைத்து, புலனாய்வுத் துறை தோல்வியடைந்து விட்டதாக கூற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட் தாக்குதல் சம்பவத்தை வைத்து, புலனாய்வுத் துறை தோல்வியடைந்து விட்டதாக கூற முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் நக்ஸலைட்டுகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 9 சிஆர்பிஎஃப் வீரர்கள் பலியாகினர். மேலும் 2 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் பலியானோரது உடல்கள், ராய்ப்பூரில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்தன. அந்த உடல்களுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் மரியாதை செலுத்தினார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சண்டையின்போது நமது வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதேநேரத்தில், இதை மத்திய அரசு ஒரு சவாலாக எடுத்துக் கொண்டுள்ளது. இத்தகைய சம்பவம் மீண்டும் நடக்காது என்று மக்கள் நம்புகின்றனர். இதில் மத்திய அரசும் முன்னெச்சரிக்கையாக இருக்கும்.
தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். நமது வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் சம்பவம் மீண்டும் நடக்காமல் தடுக்கவும் மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
சுக்மா தாக்குதல் சம்பவத்தை வைத்து, புலனாய்வுத் துறை தோல்வியடைந்து விட்டதாக கூற முடியாது. சிஆர்பிஎஃப்-பின் கோப்ரா படைப்பிரிவுக்கும், நக்ஸலைட்டுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை காலை சண்டை நடந்துள்ளது. இதிலிருந்து நமக்கு புலனாய்வுத் துறையிடம் இருந்து ரகசியத் தகவல் வந்திருப்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால், நக்ஸலைட்டுகள் எப்போதும் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
நக்ஸலைட் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் படையினரை நிறுத்துவதை காட்டிலும், ஏற்கெனவே அங்கு முகாமிட்டுள்ள வீரர்களுக்கு அதீநவீன ஆயுதங்களை வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம் ஆகும். புலனாய்வு துறையையும் வலுப்படுத்துவது, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
நக்ஸல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு மாநிலமும், இதை சவாலாக எடுத்துக் கொண்டுள்ளது. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றார் ஹன்ஸ்ராஜ் அஹீர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com