நாட்டிலேயே உ.பி.யில்தான் மத ரீதியிலான வன்முறைகள் அதிகம்: கர்நாடகத்துக்கு 2ஆவது இடம்

நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் மதரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் அதிகம் நடந்துள்ளன. இதையடுத்து, கர்நாடகத்தில் அதிக சம்பவங்கள் நடந்துள்ளன.
நாட்டிலேயே உ.பி.யில்தான் மத ரீதியிலான வன்முறைகள் அதிகம்: கர்நாடகத்துக்கு 2ஆவது இடம்

நாட்டிலேயே உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் மதரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் கடந்த 2017ஆம் ஆண்டில் அதிகம் நடந்துள்ளன. இதையடுத்து, கர்நாடகத்தில் அதிக சம்பவங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹீர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
நமது நாட்டில் கடந்த 2015ஆம் ஆண்டில் 751 மதரீதியிலான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டில் 703 மதரீதியிலான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 2017ஆம் ஆண்டில் 822 மதரீதியிலான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில், 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் அதிக மதரீதியிலான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது, 195 சம்பவங்கள் நடந்துள்ளன. இதையடுத்து கர்நாடகத்தில் 100, ராஜஸ்தானில் 91, பிகாரில் 85, மத்தியப் பிரதேசத்தில் 60 மதரீதியிலான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
2016ஆம் ஆண்டிலும் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக எண்ணிக்கையில் மதரீதியிலான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன. அதாவது உத்தரப் பிரதேசத்தில் 162 சம்பவங்களும், கர்நாடகத்தில் 101, மகாராஷ்டிரத்தில் 68, பிகாரில் 65, ராஜஸ்தானில் 63 சம்பவங்கள் நடந்துள்ளன என்று அந்தப் பதிலில் அஹீர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், காவலின்போது நேரிடும் மரணங்கள் குறித்த கேள்விக்கும், மக்களவையில் அஹீர் எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பதிலில் அவர், 'கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலும், காவலின்போது கடந்த 10 மாதங்களில் நேரிட்ட மரணங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தால் 1680 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 1530 வழக்குகள், நீதிமன்றக் காவலில் நேரிட்ட மரணங்கள் தொடர்பானவை. 144 வழக்குகள் போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பானவை ஆகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
14,460 பதுங்கு குழிகள்: மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அஹீர் எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்துள்ள மற்றோர் பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை, எல்லைக் கட்டுப்பாடு கோடு ஆகிய பகுதி நெடுகிலும் வசிக்கும் மக்களுக்காக 2016-17ஆம் ஆண்டில் ரூ.3 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட 60 பதுங்கு குழிகள் அமைக்கும் பணி முடிந்து விட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சென்று ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ரூ.415 கோடி மதிப்பில் மேலும் 14,460 பதுங்குக் குழிகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
26,500 மாணவர்கள் தற்கொலை: நாடு முழுவதும் கடந்த 2014-16ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் 26,500 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டில் 8,068 மாணவர்களும், 2015இல் 8,934 மாணவர்களும், 2016இல் 9,474 பேரும் தற்கொலை செய்துள்ளனர். கடந்த 2015இல் மகாராஷ்டிரத்தில் 1,230 மாணவர்களும், தமிழகத்தில் 955 பேரும் தற்கொலை செய்துள்ளனர். 
கடந்த 2016ஆம் ஆண்டில் மகாராஷ்டிரத்தில் அதிகப்பட்சமாக 1,147 பேரும், தமிழகத்தில் 981 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 838 பேரும் தற்கொலை செய்துள்ளனர் என்று அந்தப் பதிலில் அஹீர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com