காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்: ராகுல் சூளுரை

நரேந்திர மோடியின் நடவடிக்கையால் நம்பிக்கை இழந்துள்ள இந்தியாவுக்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் சனிக்கிழமை தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்: ராகுல் சூளுரை

காங்கிரஸ் கட்சியின் 84-ஆவது வருடாந்திரப் பொதுக்கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த வருடாந்திரப் பொதுக்கூட்டமானது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் முதன்முறையாக நடத்தப்படுகிறது. இதில், வழக்கம்போல் அல்லாமல் இம்முறை இளம் உறுப்பினர்களுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. அதுபோல கூட்ட அரங்கில் பேசவும் அவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு தினங்கள் நடைபெறும் இந்த வருடாந்திரப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறுகிறது. இதில் இந்தியா முழுவதும் உள்ள கட்சியினர் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் அக்கட்சியின் தலைவர் ராகுல் பேசியதாவது:

இது காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் மாநாடு மட்டுமல்ல இந்தியாவை அழைத்துச் செல்லும் மாநாடாக அமைந்துள்ளது. 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஏனெனில் நாடு முழுவதும் தற்போதைய அரசாங்கத்தின் மீது கோபம் ஏற்பட்டுள்ளது. நாடும், நாட்டு மக்களும் பல தரப்புகளாக பிரிந்து, சிதறிக் கிடக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் இடையில் சண்டை நிலவும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸின் முக்கியப் பணி மக்களை ஒன்றிணைப்பது ஆகும். மோடியின் மோசமான ஆட்சியின் காரணமாக எதிர்காலம் கேள்விக்குரியாகி சோர்வடைந்துள்ள கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். இளை{ஞர்களுக்கான வேலைவாய்ப்பும், விவசாயிகளின் உழைப்புக்கான ஊதியமும் இன்று சரிவரக் கிடைப்பதில்லை. இதனால் ஒட்டுமொத்த இந்தியாவும் நம்பிக்கையிழந்து சோர்வடைந்துள்ளது. 

இதிலிருந்து மீட்டு அவர்களுக்கான வாழ்க்கைப் பாதையை காங்கிரஸ் அரசாங்கத்தால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பதை நான் என் மனதில் இருந்து கூறுகிறேன். இந்த மாநாடு காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை மையப்படுத்தியே நடத்தப்படுகிறது. எதிர்காலத்துக்கான, மாற்றத்துக்கான பாதை குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது. 

கடின காலங்களிலும் சோனியா, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், சித்தராமையா, அமரீந்தர் சிங் போன்றோர் காங்கிரஸ் கட்சியை கட்டிக்காத்தனர். கட்சின் சின்னத்தை பாதுகாத்து வைத்திருந்தனர். மாற்றம் ஏற்பட்டாலும் நாம் பழையவற்றை மறந்துவிடக்கூடாது. காங்கிரஸ் கட்சியை இளைஞர்களால் மட்டும்தான் அடுத்தகட்ட நகர்வுக்கு முன்னெடுத்துச் செல்ல முடியும். ஆனால் அது அனுபவம்வாய்ந்தவர்களின் வழிகாட்டுதல் இன்றி நடந்திட முடியாது. 

காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்களையும், அனுபவமிக்கத் தலைவர்களையும் ஒன்றிணைப்பதுதான் எனது முக்கிய கடமை. காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்கட்சிகளுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அவர்கள் வன்முறையை பரப்புகின்றனர். காங்கிரஸ் அமைதியையும், அன்பையும், சகோதரத்துவத்தையும் பரப்புகிறது. 

இந்திய நாடு எல்லோருக்குமானது. எனவே காங்கிரஸ் கட்சி அனைவருக்குமான அரசாகவே செயல்படும். யாரையும் விட்டுவிடும் என்ற எண்ணம் வேண்டாம். காங்கிரஸ் கட்சி நிச்சயம் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும். இதற்கான மாற்றத்தை ஏற்படுத்த உங்களால் மட்டும் தான் முடியும். இதை கட்சியினரும், மக்களும் இணைந்து bசெயல்பட்டால்தான் சாத்தியப்படுத்த முடியும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com