ஊழலற்ற ஆட்சியை ராகுல் ஏற்படுத்துவார்: சோனியா நம்பிக்கை

அடுத்த தேர்தலில் வெல்லும் மேஜிக்கை கண்டுபிடித்துவிட்டோம். ஊழலற்ற ஆட்சியை ராகுல் மட்டும் தான் ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் வருடாந்திரப்பொதுக்கூட்டத்தில் சோனியா சனிக்கிழமை தெரிவித்தார்.
ஊழலற்ற ஆட்சியை ராகுல் ஏற்படுத்துவார்: சோனியா நம்பிக்கை

காங்கிரஸ் கட்சியின் 84-ஆவது வருடாந்திரப் பொதுக்கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த வருடாந்திரப் பொதுக்கூட்டமானது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் முதன்முறையாக நடத்தப்படுகிறது. இரு தினங்கள் நடைபெறும் இந்த வருடாந்திரப் பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறுகிறது. 

இதில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா பேசியதாவது:

ஏழைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் விரும்பவில்லை. சமூகத்தில் நலிவடைந்தவர்களை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். சாமானியனுக்கான எந்த ஒரு திட்டமும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக அராஜகத்தின் ஆட்சி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் மட்டுமே கவனம் செலுத்தியது. இதற்கெல்லாம் காங்கிரஸ் என்றுமே அஞ்சியதோ, அடிபணிந்ததோ கிடையாது. 

நரேந்திர மோடி ஆட்சியில் நடக்கும் அனைத்து ஊழல்களையும் ஆதாரத்துடன் காங்கிரஸ் நிரூபித்து வருகிறது. காங்கிரஸ் அல்லாத ஆட்சியின் போது எங்கள் நண்பர்கள் அனைவரும் வன்முறைக்கும், அராஜகத்துக்கும் எதிராகப் போராடுகின்றனர். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அவற்றை துணிவுடன் எதிர்கொள்கின்றனர். அநீதி, அடக்குமுறையை காங்கிரஸ் கட்சி என்றுமே எதிர்க்கும்.

ராகுல் தலைமையிலான காங்கிரஸ் அரசு அனைத்து அரசியல் பிரச்னைகளிலும் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றும். ராகுலால் மட்டும் தான் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த முடியும். பாஜகவுடைய அனைத்து முழக்கங்களும் நாடகம். வாக்காளர்களைக் கவர பயன்படுத்தப்படும் வழிமுறை. மன்மோகன் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் தான் பொருளாதாரம் உயர்ந்தது. 

கர்நாடகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எழுச்சி ஏற்பட்டது. அது அப்போதைய தலைவர் இந்திரா, சிக்மங்களூரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது ஆகும். அதுபோன்ற ஒரு எழுச்சியையும், வெற்றியையும் காங்கிரஸ் மீண்டும் 2019 தேர்தலில் பெறும். ஏனெனில் அந்த மேஜிக்கை நாங்கள் மீண்டும் கண்டுகொண்டோம். அது காங்கிரஸுக்கு மட்டுமான வெற்றி அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் வெற்றியாக அமையும். 

கடினமான காலங்களில் பொறுப்பேற்று சிறப்பான முறையில் காங்கிரஸ் கட்சியை ராகுல் வழிநடத்தி வருகிறார். அதற்காக அவருக்கு வாழ்த்துகள். ராகுலின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி நிச்சயம் பல சிகரங்களைத் தொடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com