ஆந்திர மக்கள் மீது எங்களுக்கு அதிக அக்கறை உண்டு: பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ்

கடந்த 4 ஆண்டுகளாக ஆந்திர மக்களுக்குச் செய்துள்ள நன்மைகளை அவர்களிடம் கூறப்போவதாக பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஆந்திர மக்கள் மீது எங்களுக்கு அதிக அக்கறை உண்டு: பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ்

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. முதலாவதாக தன்னை சந்திக்கவும், பேசவும் பிரதமர் நரேந்திர மோடி மறுப்பதாகக் கூறி தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதாக அக்கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு அறிவித்தார். பின்னர் ஆந்திர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பாஜக அமைச்சர்களும் ராஜிநாமா செய்தனர்.

பின்னர் மத்திய அரசின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். இதையடுத்து ஆந்திராவின் எதிர்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியும் அதே நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. 

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேசியச் செயலாளர் ராம் மாதவ் பேசியதாவது:

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு எழுப்பியுள்ள சர்ச்சைக்கு பதிலடி தரும் விதமாக ஆந்திராவின் தற்போதைய நிலை குறித்த தீர்மானத்தை நாங்கள் தாக்கல் செய்யவுள்ளோம். மற்ற கட்சிகளை விட ஆந்திர மக்களின் வளர்ச்சி மீது பாஜக-வுக்கு தான் அதிக ஈடுபாடு உண்டு.

கடந்த 4 ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய பாஜக அரசு பல்வேறு உதவிகளையும், நலத்திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆந்திர மக்களிடம் பாஜக நேரில் சென்று விளக்கமளிக்கும். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை விட பன்மடங்கு நன்மைகளை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் மீண்டும் இடம்பெறுமா என்பது குறித்து சந்திரபாபு நாயுடுவிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் என்று செய்தியாளர்களை நோக்கி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com