2019ஆம் ஆண்டுக்குள் மோடி இல்லாத இந்தியா: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ் தாக்கரே அழைப்பு

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, வரும் 2019ஆம் ஆண்டுக்குள் மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
2019ஆம் ஆண்டுக்குள் மோடி இல்லாத இந்தியா: எதிர்க்கட்சிகளுக்கு ராஜ் தாக்கரே அழைப்பு

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, வரும் 2019ஆம் ஆண்டுக்குள் மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று மகாராஷ்டிர நவநிர்மான் சேனை கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நவநிர்மான் சேனை கட்சிக் கூட்டத்தில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி, அவரது அரசு அளித்த பொய்யான வாக்குறுதிகளால், நாட்டு மக்கள் விரக்தியில் உள்ளனர். எனவே, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அகற்றுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். மோடி இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.
கடந்த 1947ஆம் ஆண்டில் இந்தியா முதலில் சுதந்திரம் பெற்றது. இதையடுத்து, 1977ஆம் ஆண்டில் 2ஆவது சுதந்திரத்தை பெற்றது. மோடி இல்லாத இந்தியா உருவானால், 2019ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு 3ஆவது முறையாக சுதந்திரம் கிடைக்கும்.
மத்தியில் இருக்கும் மோடி அரசு அகற்றப்பட்டு, பணமதிப்பிழப்பு குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படுமானால், நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழலாக பணமதிப்பிழப்புதான் இருக்கும்.
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டப்பட வேண்டும் என்பதை ஆதரிக்கிறேன். ஆனால், இந்த விஷயத்தை தேர்தலில் பயன்படுத்தக் கூடாது. உச்ச நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை நடந்து வருகிறது. வரும்காலத்தில் நாட்டில் மத கலவரங்களை ஏற்படுத்துவதற்கு, அதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் விடியோ ஒன்றில் பாடல் பாடுவதை போன்ற காட்சி வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரத்தில் ஏராளமான பிரச்னைகள் உள்ளன. ஆனால், மாநிலத்தின் முதல்வரோ, பாடல்களை பாடுவதில் தீவிரமாக உள்ளார்.
ஸ்ரீதேவி விவகாரம்: நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது. அவரது உடலைச் சுற்றிலும் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்தது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டது? ஸ்ரீதேவி சிறந்த நடிகையாவார். 
ஆனால், அவரது உடலில் தேசியக் கொடியை போர்த்தும் அளவுக்கு, இந்த நாட்டுக்கு என்ன பணிகளை செய்துள்ளார்? வைர வியாபாரி நீரவ் மோடியின் ஊழலை மூடிமறைக்கும் வகையில், ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்கு ஊடகங்கள் திட்டமிட்டு அதிக நேரம் ஒதுக்கி ஒளிபரப்பின.
மத்திய அரசானது, ஊடகங்கள், நீதித்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசிடம் இருந்து ஊடகங்களுக்கு மிக அதிக அளவில் நிர்பந்தம் அளிக்கப்பட்டு வருகிறது என்றார் ராஜ் தாக்கரே.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com