அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம்தான் இந்திய தத்துவம்: பிரதமர் மோடி

அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம்தான் இந்தியாவின் அடிப்படைத் தத்துவம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித போர்வையை அளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி.
அஜ்மீர் தர்காவுக்கு பிரதமர் மோடி சார்பில் புனித போர்வையை அளித்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி.

அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம்தான் இந்தியாவின் அடிப்படைத் தத்துவம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவில் 806-ஆவது ஆண்டு உருஸ் (சந்தனக் கூடு விழா) திருவிழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. சூஃபி ஞானி ஹஸ்ரத் காஜா மொய்னுதீன் சிஸ்தி அடக்கம் செய்யப்பட்ட இடமும் இங்கு உள்ளது. உருஸ் திருவிழாவை முன்னிட்டு தர்கா மற்றும் அஜ்மீர் நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டு பிரதமர் மோடி சார்பில் தர்காவுக்கு புனிதப் போர்வையை வழங்கினார். இந்த விழா தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தியில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவைதான் நமது நாட்டின் அடிப்படைத் தத்துவமாகும். சூஃபி தத்துவமும் அதில் ஒன்றுதான். இந்தியாவில் சூஃபி ஞானிகள் குறித்து நாம் பேசும்போது அதில், காஜா மொய்னுதீன் சிஸ்தி முக்கியப் பங்கு வகிக்கிறார். அவர் மிகச்சிறந்த ஆன்மிகப் பாரம்பரியத்தை உருவாக்கியவர். மனிதகுலத்துக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற அவரது கொள்கை வரும் அனைத்துத் தலைமுறையினருக்கும் பயனளித்து வருகிறது.
பல்வேறு கலாசாரத்தையும், பண்பாடுகளையும் கொண்ட இந்தியாவில் இப்போதுள்ள நல்லிணக்கம் எப்போதும் தொடர வேண்டும் என்று மோடி கூறியுள்ளார்.
அஜ்மீரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நக்வி, 'பயங்கரவாதம் என்பது இஸ்லாமுக்கும், மனித குலத்துக்கும் பொதுவான எதிரியாகும். நாட்டின் அமைதிக்காகவும், வளர்ச்சிக்காவும் மத்திய அரசு பாடுபட்டு வருகிறது' என்றார்.
முன்னதாக, அஜ்மீர் தர்கா வரும் பக்தர்களின் வசதிக்காக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் சார்பில் கட்டப்பட்ட 100 கழிவறைகளையும் நக்வி திறந்துவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com