கர்நாடகத்தில் இன்றும், நாளையும் ராகுல் சுற்றுப்பயணம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய், புதன்கிழமைகளில் (மார்ச் 20, 21) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறுகிறது.
கர்நாடகத்தில் இன்றும், நாளையும் ராகுல் சுற்றுப்பயணம்

கர்நாடகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய், புதன்கிழமைகளில் (மார்ச் 20, 21) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கடந்த சில மாதங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கர்நாடகத்துக்கு வருகை தந்து ஏற்கெனவே பிரசாரம் செய்துள்ளனர்.
மூன்றாம் கட்ட சுற்றுப்பயணத்தில் ராகுல்: இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடகத்தில் முதல்கட்ட சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, கொப்பள், பெல்லாரி, ராய்ச்சூரு, யாதகிரி, கலபுர்கி, பீதர் மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். இரண்டாம் கட்டமாக, பெலகாவி, விஜயபுரா, பாகல்கோட், தார்வாட் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.
தற்போது மூன்றாம் கட்டமாக மார்ச் 20-ஆம் தேதிமுதல் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் ராகுல்காந்தி, உடுப்பி, தென் கன்னடம், சிக்மகளூரு, ஹாசன் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபடவிருக்கிறார். அப்போது கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களுக்கு ராகுல் காந்தி சென்றுவழிபடவிருக்கிறார்.
வழிபாட்டு தலங்களில் தரிசனம்: இதற்காக செவ்வாய்க்கிழமை ( மார்ச் 20) காலை 8 மணிக்கு தில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு காலை 11.15 மணிக்கு மங்களூரு வருகைதரும் ராகுல்காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் உடுப்பி மாவட்டத்தின் தென்கே எர்மல் செல்கிறார். நண்பகல் 12.55 மணிக்கு ராஜீவ் காந்தி அரசியல் மையத்தில் சேவாதள் நிர்வாகிகளிடையே பேசுகிறார். பிற்பகல் 1.45 மணிக்கு படுபித்ரே நகரில் நடக்கும் தெருமுனைக் கூட்டத்தில் பேசிய பின், முல்கி, சூரத்கல், மங்களூரின் ஜோதி சதுக்கத்தில் வழங்கப்படும் வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்.
மாலை 6 மணிக்கு மங்களூரில் உள்ள நேரு மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசும் ராகுல் காந்தி, இரவு 7.30 மணிக்கு கோகர்னாதேஸ்வரா கோயில், ரோசரியோ தேவாலயம், உள்ளால் தர்காவுக்கு சென்று வழிபடுகிறார். பின்னர், மங்களூரில் இரவு தங்குகிறார்.
இதைத் தொடர்ந்து, புதன்கிழமை ( மார்ச் 21) காலை 8.30 மணிக்கு மங்களூரில் தென்கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களின் வட்ட காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பேசுகிறார். பின்னர், அம் மாவட்டத்தின் முன்னணி தலைவர்களைச் சந்திக்கிறார். ஹெலிகாப்டர் மூலம் காலை 11 மணிக்கு சிருங்கேரி வரும் ராகுல் காந்தி, சாரதாம்பாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறார். நண்பகல் 12.15 மணி அளவில் ஜகத்குரு சங்காராச்சாரியா பாரதி தீர்த்த சுவாமிகளைச் சந்தித்து ஆசிபெறுகிறார். 
பின்னர், சிருங்கேரி மடத்தில் உள்ள ராஜீவ்காந்தி சம்ஸ்கிருத பல்கலைக்கழக மாணவர்களிடையே உரையாற்றுகிறார். பிற்பகல் 1.30 மணி அளவில் வட்ட காங்கிரஸ் அலுவலகத்தைத் திறந்து வைக்கிறார். பின்னர், சிக்மகளூருக்கு வருகை தரும் ராகுல் காந்தி, மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மாலை 6 மணிக்கு ஹாசனில் நடக்கும் கூட்டத்தில் பேசுகிறார். அதன்பிறகு மைசூரு சென்று, அங்கிருந்து தில்லி புறப்பட்டுச் செல்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com