சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை மறைமுகமாக எதிர்க்கிறார் நீரவ் மோடி: தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, தொழிலதிபர் நீரவ் மோடி தனது
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை மறைமுகமாக எதிர்க்கிறார் நீரவ் மோடி: தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தகவல்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை, தொழிலதிபர் நீரவ் மோடி தனது நிறுவனத்தின் மூலம் மறைமுகமாக எதிர்ப்பதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
தொழிலதிபரும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி, அவரது தொழில்பங்குதாரர் மெஹுல் சோக்ஸி உள்ளிட்டோர், பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பைக் கிளையில் அதிகாரிகள் துணையுடன் ரூ.12,000 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு, வெளிநாடு தப்பிய விவகாரம் அண்மையில் அம்பலமானது.
இருவரும் எந்த நாட்டில் உள்ளனர்? என்பது இதுவரை உறுதியாகாத நிலையில், இந்த மோசடி தொடர்பாக சிபிஐ இரு வழக்குகளை பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் நீரவ் மோடி மற்றும் அவரது நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில், நீரவ் மோடிக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறையினர், பல கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகள், மதிப்புமிக்க நவரத்தின கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். அவருக்கு சொந்தமான அசையா சொத்துகளையும் முடக்கியுள்ளனர்.
இந்நிலையில், அமலாக்கத் துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை கோரி, நீரவ் மோடியின் 'ஃபயர்ஸ்டார் டைமண்ட்' நிறுவனம் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், 'எங்களது நிறுவனத்தின் சொத்துகளையும், வங்கி வைப்புத் தொகையையும் முடக்கும் அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க வேண்டும்; இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள தகவல் அறிக்கையின் நகலை வழங்க வேண்டும். அமலாக்கத் துறையின் சோதனை, பறிமுதல் நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஃபயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் இயக்குநரான நீரவ் மோடி, வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார். அமலாக்கத் துறை மட்டுமல்லாது சிபிஐ விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. அவரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் மூலம் விசாரணைக்கு ஆஜராகும் எண்ணம் அவருக்கு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை, தனது நிறுவனத்தின் வாயிலாக நீரவ் மோடி மறைமுகமாக எதிர்க்கிறார். இதன் மூலம் இந்திய சட்ட நடைமுறைகளை தவறாக பயன்படுத்த அவர் முயற்சிக்கிறார். அதனை அனுமதிக்கக் கூடாது.
இந்த விவகாரத்தில் அமலாக்கத் துறையின் விசாரணை மிகவும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இதுபோன்ற சூழலில் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பித்தால், விசாரணையின் அடிப்படையே சீர்குலைந்துவிடும். மேற்கண்ட மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com