நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி: நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் முயற்சி மீண்டும் தோல்வி

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமையும் அமளி நீடித்ததால், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் முயற்சி தோல்வியடைந்தது.
மக்களவையில் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.
மக்களவையில் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமையும் அமளி நீடித்ததால், மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் முயற்சி தோல்வியடைந்தது.
ஏற்கெனவே, கடந்த வெள்ளிக்கிழமை இதே போன்று நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சி நடைபெற்றது. அப்போதும் மக்களவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இப்போது, மீண்டும் இரண்டாவது முறையாக அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. 
11-ஆவது நாளாக முடக்கம்: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் திங்கள்கிழமை தொடர்ந்து 11-ஆவது நாளாக முடங்கின. முக்கியமாக மாநிலங்களவை தொடங்கிய 10 நிமிடங்களிலேயே நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை முதலில் முற்பகல் வரையும், பிறகு மீண்டும் கூடியபோது நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
அரசு தயார்- ராஜ்நாத் சிங்: மக்களவை கூடியதும் வங்கிக் கடன் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை மையமாக வைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். இதற்கு நடுவே பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'சில கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளன. இந்தத் தீர்மானம் உள்பட எந்த விஷயம் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக இருக்கிறது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்' என்றார். எனினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அவையின் மையப்பகுதியில் குவிந்து கோஷமிட்டனர்.
தீர்மானம் கொண்டுவர முடியாது: இதையடுத்து பேசிய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், 'அவையில் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் இருக்கைக்குச் சென்று அமைதியாக அமர வேண்டும். இப்படி தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தால், அரசு மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முடியாது' என்றார். எனினும், தொடர்ந்து கூச்சல், குழப்பம் நீடித்தது. இதையடுத்து, அவை ஒத்திவைக்கப்பட்டது.
மீண்டும் கோஷம்: அவை மீண்டும் கூடியபோது அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் இடஒதுக்கீடு சலுகை கோரிக்கையை முன்வைத்தும் வாசக அட்டைகளுடன் அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர். அவர்களை இருக்கைக்குச் செல்லுமாறு அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் தொடர்ந்து வலியுறுத்தினார். ஆனால், அவர்கள் அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து கோஷமிட்டனர். இதனால், அவையை நாள் முழுவதற்கும் ஒத்திவைப்பதாக சுமித்ரா மகாஜன் அறிவித்தார்.
முன்னதாக, ஆந்திர மாநில ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகியவை சார்பில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர தனித்தனியாக நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
மாநிலங்களவையும் முடக்கம்: மாநிலங்களவை திங்கள்கிழமை கூடியதும் திமுக, அதிமுக எம்.பி.க்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். அதேபோல தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. கே.வி.பி.ராமச்சந்திர ராவ் உள்ளிட்டோரும் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி கோஷமிட்டனர்.
மக்கள் குறை கூறுகின்றனர்: அவர்களை அமைதியாக இருக்கைக்குத் திரும்புமாறு வலியுறுத்திய அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, 'நீங்கள் செய்வது நாட்டுக்கும் நல்லதல்ல, நாடாளுமன்றத்துக்கும் நல்லது அல்ல. மக்கள் ஏற்கெனவே நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்குவது குறித்து குறை கூறத் தொடங்கிவிட்டனர். அனைத்து விஷயங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று தெரிவித்த பிறகும் அமளியில் ஈடுபடுவது ஏன்? இது எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும்' என்று வெங்கய்ய நாயுடு கேள்வி எழுப்பினார். 
எனினும், எம்.பி.க்கள் இருக்கைக்கு செல்லவில்லை. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக வெங்கய்ய நாயுடு அறிவித்தார். அவை தொடங்கிய 10 நிமிடத்திலேயே நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com