நேஷனல் ஹெரால்டு வழக்கு: யங் இந்தியா நிறுவனம் ரூ.10 கோடி வைப்புத் தொகை செலுத்த உத்தரவு

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், வருமான வரித் துறையிடம் ரூ.10 கோடியை வைப்புத் தொகையாக செலுத்தும்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில், வருமான வரித் துறையிடம் ரூ.10 கோடியை வைப்புத் தொகையாக செலுத்தும்படி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை பங்குதாரர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனத்துக்கு தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 
மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதை 'அசோசியேடட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது. 
நிர்வாகச் சீர்கேடு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் 2008-ஆம் ஆண்டு இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது.
இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, 'அசோசியேடட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது.
இதன் மூலம் அசோசியேடட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதனிடையே, 2011-12ஆம் ஆண்டுக்கான வருமான வரி, அபராதம் உள்பட ரூ.249.15 கோடியை 'யங் இந்தியா' நிறுவனம் செலுத்த வேண்டும் என்று வருமான வரித் துறை கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பியது. 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரி மேல்முறையீடுகளுக்கான ஆணையரிடம் யங் இந்தியா நிறுவனம் மனு அளித்தது. ஆனால், ரூ.249.15 கோடியில் 20 சதவீதத்தை (சுமார் ரூ.49 கோடி) வைப்புத் தொகையாக செலுத்தினால் மட்டுமே அந்த மனு ஏற்கப்படும் என்று வருமான வரித் துறை தெரிவித்துவிட்டது.
இதனை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் யங் இந்தியா நிறுவனம் சார்பில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், ஏ.கே.சாவ்லா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித் துறையிடம் ரூ.10 கோடியை வைப்புத் தொகையாக செலுத்தும்படி யங் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அந்த தொகையின் முதல் பாதியை மார்ச் 31-ஆம் தேதிக்குள்ளும், மீதியை ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அத்துடன், யங் இந்தியா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்கும்படி வருமான வரித் துறை உயரதிகாரிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக, ரூ.10 கோடி நிதியை திரட்டுவது தங்களுக்கு சிரமம் என்பதால் அத்தொகையை ரூ.7.5 கோடியாக குறைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்திலேயே அதனை செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் யங் இந்தியா நிறுவனத்தின் தரப்பில் கோரப்பட்டது. ஆனால், இரு கோரிக்கைகளையும் நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர்.
வருமான வரித் துறையிடம் உள்ள ஆவணங்களின்படி, யங் இந்தியா நிறுவனத்தின் 83.3 சதவீத பங்குகள் சோனியா, ராகுலிடம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com