லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை: கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம்

லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க நீதிபதி நாகமோகன் தாஸ் குழுவின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க கர்நாடக அமைச்சரவையில் திங்கள்கிழமை

லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க நீதிபதி நாகமோகன் தாஸ் குழுவின் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க கர்நாடக அமைச்சரவையில் திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் பெங்களூரு விதான செளதாவில் திங்கள்கிழமை முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்றது. அதில், லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்க பரிந்துரைத்துள்ள நீதிபதி நாகமோகன் தாஸ் குழுவின் அறிக்கை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில், லிங்காயத்து, வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை தனி மதமாக அங்கீகரிக்குமாறு பரிந்துரைத்துள்ள நீதிபதி நாகமோகன் தாஸ் குழுவின் அறிக்கையை ஏற்பது என்றும், அந்தப் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அப்போது நிறைவேற்றப்பட்டதீர்மானம் வருமாறு:
பல்வேறு சமுதாயங்களின் நலன்கள் குறித்து ஒருசில விவாதங்கள், கலந்தாய்வுகள் நடத்தப்பட்டன. நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலான அறிஞர் குழுவின் அறிக்கையின்படி, கர்நாடக மாநில சிறுபான்மையினர் சட்டப் பிரிவு 2(டி)-இன்படி, லிங்காயத்து, வீரசைவ லிங்காயத்து (பசவண்ணரின் தத்துவங்களில் நம்பிக்கையுள்ளோர்) சமுதாயத்தை சிறுபான்மையினர் மதமாக அங்கீகரிக்குமாறு கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையம் அளித்துள்ள பரிந்துரைகளை ஏற்பது என்று அமைச்சரவை முடிவு செய்கிறது. 
இந்தப் பரிந்துரையை மத்திய சிறுபான்மையினர் ஆணையச்சட்டத்தின் பிரிவு 2(சி)-இன்படி அறிவிக்கையாக வெளியிடும்படி கேட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
அறிஞர் குழுவின் அறிக்கையை கர்நாடக அரசுக்கு அனுப்பிவைத்துள்ள மாநில சிறுபான்மையினர் ஆணையம், அரசு எடுக்கும் முடிவு இதர மத அல்லது மொழி சிறுபான்மையினரின் பயன்களைப் பாதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் பரிந்துரையின்படி, லிங்காயத்து, வீர சைவ லிங்காயத்து (பசவண்ணரின் தத்துவங்களில் நம்பிக்கையுள்ளோர்) சமுதாயத்தினருக்கு மதச் சிறுபான்மையினர் அங்கீகாரத்தை வழங்கக் கேட்பதோடு, மாநிலத்தின் இதர சிறுபான்மையினர் நலன்களை பாதிக்காதவாறு அந்த அங்கீகாரம் அமைய வேண்டும் என்ற நிபந்தனையோடு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
மதச் சிறுபான்மையினர் அங்கீகாரத்தை வழங்குவது என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளதால், உரிய நடைமுறைகளைப் பின்பற்றிய பிறகும், இந்த முடிவு இதர சிறுபான்மையினர் அல்லது சிறுபான்மையினர் அல்லது பொதுமக்கள் மீதான தாக்கத்தை ஆராய்ந்த பிறகு,முறையான அறிவிக்கை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆதரவும் எதிர்ப்பும்....
அமைச்சரவை எடுத்துள்ள முடிவை வரவேற்று, ஹுப்பள்ளி, கலபுர்கி, விஜயபுரா,பெங்களூரு போன்ற பல நகரங்களில் லிங்காயத்துகள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால், அரசின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீரசைவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், ஒருவர் காயமடைந்தார். இந்தச் சம்பவம் குறித்து லிங்காயத்துகளுக்கு எதிராக வீரசைவர் சமுதாயத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாஜக பொதுச் செயலாளரும் அக்கட்சியின் கர்நாடக மாநிலத்துக்கான மேலிடப் பொபுறுப்பாளருமான முரளிதர் ராவ் தில்லியில் கூறியது:
காங்கிரஸ் கட்சி, பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக சித்தராமையா நெருப்போடு விளையாடுகிறார். இந்த நடவடிக்கையா காங்கிரஸ் கட்சி தேர்தலுக்கு முன்பே ஏன் எடுக்கவில்லை? நான்கு ஆண்டுகளாக அக்கட்சி என்ன செய்து கொண்டிருந்தது ? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
பாஜக எம்.பி. ஷோபா கரந்தலஜே கூறுகையில் 'கர்நாடக மாநில சிறுபான்மையினர் ஆணையம் அளித்த பரிந்துரையை கர்நாடக அமைச்சரவை ஏற்றுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். இந்த முடிவுக்காக முதல்வர் சித்தராமையாவை கன்னட மக்கள் மன்னிக்க மாட்டார்கள். சமுதாயத்தைப் பிளவுபடுத்தி வாக்கு வங்கியைப் பலப்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் சமுதாயத்தை பிளவுபடுத்துவதையே காங்கிரஸ் தனது கொள்கையாக வைத்துள்ளது. லிங்காயத்து சமுதாயத்தை தனிமதமாக அங்கீகரிப்பதை பாஜக எதிர்க்கிறது' என்று தெரிவித்தார்.
ரம்பாபுரி (வீரசைவ) பீடத்தின் மடாதிபதி ஜெகத்குரு பிரசன்ன ரேணுகா வீரசோமேஸ்வர சிவாச்சார்ய சுவாமிகள் கூறுகையில் 'கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தீவிர போராட்டம் நடத்தப்படும். சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் முயற்சியை ஏற்க முடியாது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com