39 இந்தியர்களின் மரணத்தை திசை திருப்பவே காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

39 இந்தியர்களின் மரணத்தை திசை திருப்பவே காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு

இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருந்து திசை திருப்பவே,

இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற 39 இந்தியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் இருந்து திசை திருப்பவே, தகவல் திருட்டு நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக புதிய குற்றச்சாட்டை மத்திய அரசு முன் வைத்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி மோசடி செய்யப்பட்ட விவகாரம், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்யும் வகையிலான தீர்ப்பு, இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் உறவினர்கள் எழுப்பும் கேள்விகள், ஆகிய பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மத்திய அரசு திசை திருப்ப முயல்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
 இதுதொடர்பாக, ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
 பிரச்னை: இராக்கில் 39 இந்தியர்களின் மரணம். மத்திய அரசின் பொய் அம்பலமாகிவிட்டது. பிரச்னைக்கு தீர்வு: தகவல் திருட்டு நிறுவனத்துடன் காங்கிரஸýக்குத் தொடர்பு இருப்பதாக புதிய கதை கண்பிடிப்பு. பலன்: ஊடகங்களுக்கு புதிய செய்தி கிடைத்துவிட்டது. 39 இந்தியர்களின் மரணம் மக்களின் கவனத்தில் இருந்து விலகி விட்டது. பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்று ராகுல் காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 இதேபோல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலாவும், மத்திய அரசைக் குற்றம் சாட்டியுள்ளார். "இராக்கின் மொசூல் நகரில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதை மோடி தலைமையிலான மத்திய அரசும், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் 4 ஆண்டுகளாக மறைத்தது ஏன்? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் உயிருடன் இருப்பதாக மத்திய அரசு கூறி வந்தது? இதிலிருந்து உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினரையும், இந்த நாட்டு மக்களையும் மத்திய அரசு பொய் சொல்லி ஏமாற்றியுள்ளது' என்றும் சுர்ஜேவாலா குற்றம் சாட்டினார்.
 பாஜக குற்றச்சாட்டு: இதனிடையே, 39 இந்தியர்களின் மரணத்தை வைத்து ராகுல் காந்தி அரசியல் செய்கிறார் என்று பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறியதாவது:
 இராக்கில் துரதிருஷ்டவசமான சூழலில் 39 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதை வைத்து ராகுல் காந்தி அரசியல் செய்ய வேண்டாம். சர்ச்சைக்குரிய "கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனத்துடன் காங்கிரஸ் கட்சி தொடர்பு வைத்திருப்பதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே தகவல்கள் வெளியாகின. அப்போதெல்லாம் மறுப்பு தெரிவிக்காத காங்கிரஸ் கட்சி, இந்தப் பிரச்னையை பாஜக கூறும்போது மட்டும் மறுப்பு தெரிவிக்கிறது என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com