லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? 12 மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்காத 12 மாநிலங்களும், இதுவரை ஏன் அமைக்கவில்லை என்பது குறித்து 2 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? 12 மாநிலங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு


புது தில்லி: லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்காத 12 மாநிலங்களும், இதுவரை ஏன் அமைக்கவில்லை என்பது குறித்து 2 வாரங்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு அதிகாரிகள், அசியல்வாதிகள், எம்எல்ஏ, எம்பிக்கள், ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் மற்றும் லோக் ஆயுக்த அமைப்புகள் உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. அதுதொடர்பான சட்டத்தை கடந்த 2013-ஆம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் அரசு நிறைவேற்றியது.

2013ம் ஆண்டே இது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், தமிழகம், புதுச்சேரி உட்பட 14 மாவட்டங்களில் இதுவரை லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்படவில்லை.

இதையடுத்து தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

லோக் ஆயுக்தா சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்கள் மேற்கொள்ள இருந்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

நாடு முழுவதும் லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்கள் இதுவரை லோக் ஆயுக்தா நீதிமன்றங்களை அமைக்கவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அதாவது, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர், மேகாலயம், மிசோரம், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, தில்லி உட்பட 12 மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த லோக் ஆயுக்தா நீதிமன்றத்தை இதுவரை அமைக்காதது ஏன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் ஏன் அமைக்கவில்லை என்பது தொடர்பாக 12 மாநிலங்களும் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யவும், லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைக்க இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் இரண்டு வாரத்துக்குள் பிரமாணப் பத்திரத்தை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், லோக் ஆயுக்தா அமைக்கப்பட்ட மற்ற மாநிலங்களில், அந்த நீதிமன்றங்கள் எந்த வகையில் செயல்பட்டு வருகிறது என்பதையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதோடு, 2 வாரத்துக்குப் பிறகு கால அவகாசம் கேட்கக் கூடாது என்றும், கால அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும், ஒவ்வொரு மாநிலத்தின் தலைமைச் செயலரும், பிரமாணப் பத்திரத்தை நேரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com