அரசியல் உள்நோக்கம் கொண்ட கலவர வழக்குகள் வாபஸ் பெறப்படும்: உ.பி. அரசு

அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள கலவர வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

அரசியல் உள்நோக்கத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ள கலவர வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
 தலைநகர் லக்னௌவில் அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் பிரிஜேஷ் பதக் வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கூறியதாவது:
 இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் கலவர வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. அவ்வாறு பதிவான வழக்குகள் அரசியல் பழிவாங்கும் எண்ணத்துடன் செய்யப்பட்டிருந்தால் அவற்றை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிப்போம்.
 அரசியல் காரணங்களால் கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவற்றை திரும்பப் பெறலாம் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 62 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்றார் பிரிஜேஷ் பதக்.
 முசாஃபர்நகர், ஷாம்லி ஆகிய நகரங்களில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 131 வழக்குகளை வாபஸ் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.
 அந்த காலகட்டத்தில் மாநிலத்தில் சமாஜவாதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, 1,455 பேருக்கு எதிராக முசாஃபர்நகர், ஷாம்லி நகரங்களில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2013-இல் அந்த நகரங்களில் நடைபெற்ற கலவரங்களில் சுமார் 62 பேர் கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து தவித்தனர். முசாஃபர்நகர் கலவர வழக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சுரேஷ் ராணாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இன்னும் சில பாஜக பிரமுகர்களுக்கு எதிராகவும் கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பல்யாண், பிஜ்னோர் எம்.பி.யான பர்தேந்து சிங், எம்எல்ஏ உமேஷ் மாலிக், பாஜக மூத்த தலைவர் சாத்வி பிராச்சி ஆகியோருக்கு எதிராக கலவர வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 கடந்த 2007-ஆம் ஆண்டில் கோரக்பூரில் கலவரத்தை தூண்டியதாக அப்போது அத்தொகுதியின் எம்.பி.யாக இருந்த யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அந்த மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com