அரசுப் பணி வழங்க வேண்டும்! இராக்கில் கொல்லப்பட்ட இந்தியரின் மனைவி கோரிக்கை

இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவரான சமர் திகாதரின் மனைவி, தமக்கு அரசு பணி வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்திக் கொல்லப்பட்ட இந்தியர்களில் ஒருவரான சமர் திகாதரின் மனைவி, தமக்கு அரசு பணி வழங்கி உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 இராக்கில் கடந்த 2014-ஆம் ஆண்டு 39 இந்தியர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர். அவர்கள் உயிருடன் இருப்பதாகவே கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை மத்திய அரசு கூறி வந்தது. இந்நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் அண்மையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், கடத்தப்பட்ட இந்தியர்களை பயங்கரவாதிகள் கொன்றுவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவர்களது உடல்கள் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 இராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்களாவர். அவர்களைத் தவிர பிகார், ஹிமாசலப் பிரதேசம், மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களும் பயங்கரவாதிகளின் கோரச் செயலுக்கு பலியாகினர். அவர்களில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சமர் திகாதரின் மனைவி தீபாலி, தனது குடும்பச் சூழலையும், பொருளாதார நிலையையும் பிடிஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை எடுத்துரைத்தார். அப்போது அவர் உருக்கமாக கூறியதாவது:
 மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் இந்திய - வங்கதேச எல்லையை ஒட்டி எங்களது வீடு அமைந்துள்ளது. அதுவும் சிறிய மண் குடில்தான். கடந்த 2011-ஆம் ஆண்டு சமர் இராக்குக்குச் சென்றார். எங்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். பயங்கரவாதிகளால் சமர் கடத்தப்பட்டுவிட்டார் என்ற தகவல் அறிந்ததும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்றாவது ஒரு நாள் அவர் திரும்பி வந்துவிடுவார்; குடும்பத்தைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தேன். அந்த நம்பிக்கை இப்போது பொய்யாகிவிட்டது. எங்களது எதிர்காலமே கேள்விக் குறியாகிவிட்டது.
 எனக்கு கிடைக்கும் சொற்ப வருமானம் ரூ.5 ஆயிரத்தைக் கொண்டுதான் இன்று வரை குழந்தைகளை படிக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். இனிமேலும் அது சாத்தியமா? எனத் தெரியவில்லை. எனவே, குடும்ப சூழலைக் கருத்தில் கொண்டு எனக்கு அரசுப் பணி வழங்க வகை செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கையை முன்வைக்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்திக்க விரும்புகிறேன். அதற்கு அனுமதி கிடைக்கும் என நம்புகிறேன் என்றார் அவர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com