ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட தெலுங்கு தேசம் கோரிக்கை

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துமாறு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் தெலுங்கு தேசம் கோரியுள்ளது.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துமாறு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனிடம் தெலுங்கு தேசம் கோரியுள்ளது.
 மக்களவை தொடர்ந்து 14ஆவது நாளாக வியாழக்கிழமையும் முடங்கியது. இதனால் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி அளித்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மான நோட்டீஸை அவைத் தலைவரால் விவாதத்துக்கு எடுக்க இயலவில்லை. அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் ஒய்.எஸ்.சௌதரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 மக்களவையில் எங்கள் கட்சித் தலைவர் இன்று (வியாழன்)அவைத் தலைவரைச் சந்தித்தார். அப்போது அப்போது ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆலோனைகளை அவரிடம் தெரிவித்தார். எனினும், அதற்கு ஆக்கபூர்வமான பதில் கிடைக்கவில்லை.
 தற்போது இரு அவைகளும் நடத்தப்படும் விதம் (அமளி) எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அமளியில் ஈடுபடுவோரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. எனினும், அவையின் மையப்பகுதியில் வந்து கூச்சல்-குழப்பத்தில் ஈடுபடுவோரை இடைநீக்கம் செய்யும் வாய்ப்பு அவைத் தலைவருக்கு உள்ளது.
 எங்களது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் அதிமுக எம்.பி.க்கள் திட்டமிட்டு அவையில் அமளியில் ஈடுபடுகின்றனர். ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் அனைத்து எம்.பி.க்களின் கருத்தையும் அறிவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்துமாறு நாங்கள் சுமித்ரா மகாஜனிடம் கேட்டுக் கொண்டோம்.
 ஒருபுறம் அமளி நடைபெற்றாலும் அதற்கு இடையே சில மசோதாக்களை அரசு நிறைவேற்றிவிட்டது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்வதால் மட்டுமே அரசு கவிழ்ந்து விடாது. எனவே, அந்தத் தீர்மானத்தை விவாதத்துக்கு ஏற்கும்படி ஒரு கோரிக்கை வரும்போது அதை ஏற்க வேண்டியது ஆளுங்கட்சியின் பொறுப்பாகும்.
 இது தொடர்பாக விவாதம் மட்டும் நடக்குமே தவிர வேறு ஒன்றும் நடந்து விடாது. அரசுக்குப் போதிய எம்.பி.க்கள் பலம் இருப்பதால் ஆளும் தரப்பினர் எதையும் இழக்கப் போவதில்லை. நாடாளுமன்றகூட்டத்தொடர் நடைபெறும் வரை, எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி குடியரசுத் தலைவரை அணுக மாட்டோம்.
 சிறப்பு மாநில அந்தஸ்து கோரி தங்கள் எம்.பி.க்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அறிவித்துள்ளதுபோல் எங்கள் கட்சி எம்.பி.க்களும் பதவி விலகுவார்களா? என்று கேட்கிறீர்கள். அவர்களின் உத்தியை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இன்னும் 6 மாதங்கள் மமட்டுமே இருக்கின்றன.
 அடுத்த மூன்று அல்லது நான்கு மாதம் வரை எம்.பி.க்களின் ராஜிநாமாவை அவைத் தலைவர் ஏற்கா விட்டால் அவர்கள் எம்.பி.யாகவே நீடிப்பார்கள். எனவே இந்த விஷயத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸார் வெறுமனே நாடகமாடுகிறார்கள். இப்போது ராஜிநாமா செய்வது என்பது கேலிக்குரிய ஒன்றாகவே இருக்கும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com