உ.பி. பேரவையில் இருந்து சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் வெளிநடப்பு

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தன

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் வியாழக்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
 உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின்போது, கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் சூர்ய பிரதாப் சாஹி, விவசாயிகளின் தற்போதைய பிரச்னைகளுக்கு முந்தைய சமாஜவாதி அரசுதான் காரணம் என்றார். அதற்கு, எதிர்க்கட்சித் தலைவரும், சமாஜவாதி கட்சியின் உறுப்பினருமான ராம் கோவிந்த் செளதரி மறுப்பு தெரிவித்ததார். மேலும், தற்போதைய பாஜக அரசு, சட்ட விரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் லலித் மோடி, நீரவ் மோடி உள்ளிட்டோருடன் நெருக்கமான உறவு வைத்திருக்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 அப்போது, விவசாயிகள் பிரச்னையுடன் தொடர்பு இல்லாத விஷயங்களை ராம் கோவிந்த் செளதரி பேசுவதாக பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கன்னா குற்றம் சாட்டினார். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் பிரச்னையில் ஆளும் பாஜக அரசு அக்கறையின்றி இருப்பதாகக் கூறி, செளதரி உள்ளிட்ட சமாஜவாதி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 அதைத் தொடர்ந்து, "தற்போதைய பாஜக ஆட்சியில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து விட்டது; லலித்பூர், மஹோபா, சீதாபூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று காங்கிரஸ் சட்டப் பேரவைக் குழுத் தலைவர் அஜய் குமார் சிங் லல்லு குற்றம் சாட்டினார். அதற்கு மறுப்பு தெரிவித்த வேளாண் அமைச்சர், மாநிலத்தில் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றார். அவரது பதிலால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 அதைத் தொடர்ந்து, விவசாயிகள் பிரச்னைகள் குறித்து அவையில் ஒரு மணி நேரம் விவாதிக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் சுக்தேவ் ராஜ்பர் கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை பேரவைத் தலைவர் ஏற்காததால், ராஜ்பர் உள்ளிட்ட பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com