காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தடுக்க மத்திய அரசுக்கு நெருக்கடி: கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தடுக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது என்று கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தடுக்க மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பது என்று கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 பெங்களூரு, விதானசெளதாவில் வியாழக்கிழமை கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது. இக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், டி.வி. சதானந்த கெளடா, நீர்வளத் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், சட்டத் துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா, பெங்களூரு வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், மின் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், வீட்டு வசதித் துறை அமைச்சர் எம்.கிருஷ்ணப்பா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் எம்.ஆர்.சீத்தாராம், எம்.பி.க்கள் வீரப்பமொய்லி, பிரஹலாத்ஜோஷி, பி.சி.கதீகெளடர், சுரேஷ் அங்கடி, எஸ்.பி.முத்தஹனுமேகெளடா, பி.என்.சந்திரப்பா, பி.சி.மோகன், பிரதாப்சிம்ஹா, சிவக்குமார் உதாசி, பி.வி.நாயக், பகவந்த்கூபா, பிரபாகர்கோரே, ராஜீவ்சந்திரசேகர், கே.சி.ராமமூர்த்தி, குபேந்திர ரெட்டி, தலைமைச் செயலாளர் ரத்னபிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 இக் கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசியது: காவிரி ஆற்றுநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக 2007 பிப்.5-ஆம் தேதி காவிரி நடுவர் மன்றம் அளித்துள்ள தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக பரிந்துரையை வழங்கியிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்.16-ஆம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்துள்ளது. அந்த தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் எதையும் குறிப்பிடவில்லை. அதன்மூலம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்பது தெளிவாகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்னை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வந்தால், இந்த கருத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான விவகாரத்தை தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பினால், அதை ஒருமித்த குரலில் கர்நாடக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்த்து, மாநில தண்ணீர் உரிமையைப் பாதுகாக்க எப்போதும் போல ஒத்துழைக்க வேண்டும் என்று கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்களை கேட்டுக்கொள்கிறேன்.
 அதேபோல, தனது தீர்ப்பை அமலாக்குவதற்காக மாநிலங்களுக்கு இடையிலான தண்ணீர் சிக்கல் சட்டம்,1956-இன் பிரிவு 6(ஏ)-இன்படி தீர்ப்பு வெளியான 6 வாரங்களுக்குள் செயல்திட்டம் (ஸ்கீம்)அமைக்க வேண்டுமென்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செயல்திட்டம் எப்படி இருக்க வேண்டும்? என்பது குறித்து கர்நாடக தரப்பு வழக்குரைஞர்குழுவின் தலைமையை ஏற்றிருக்கும் ஃபாலி நாரிமனிடம் மற்றொரு சுற்று ஆலோசனை நடத்தி, அது குறித்து மத்திய நீர்வளத் துறைக்கு தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com