பாசனத் திட்டத்தில் முறைகேடா? ஆந்திர முதல்வர் திட்டவட்ட மறுப்பு

ஆந்திரத்தின் பட்டிசம் பகுதியில் வேளாண் பாசனத் திட்டம் அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்தக் குற்றச்சாட்டை
பாசனத் திட்டத்தில் முறைகேடா? ஆந்திர முதல்வர் திட்டவட்ட மறுப்பு

ஆந்திரத்தின் பட்டிசம் பகுதியில் வேளாண் பாசனத் திட்டம் அமைத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்தக் குற்றச்சாட்டை அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு திட்டவட்டமாக மறுத்துள்ளார். தனது வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் என கூறியுள்ள அவர், ஒருபோதும் தாம் தவறிழைத்தது இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 ஆந்திரத்தில் பாயும் கோதாவரி ஆற்று நீரை விவசாயத்துக்குப் பயன்படுத்துவதற்காக பட்டிசம் பகுதியில் புதிய பாசனத் திட்டம் ஒன்று அமைக்கப்பட்டது. நீரேற்று பாசன முறையில் (லிஃப்ட் இரிகேஷன்) அது வடிமைக்கப்பட்டது. அதாவது,மேடான விளைநிலங்களுக்குத் தேவைப்படும் நீரை ஓரிடத்தில் நீரைத் தேக்கி வைத்து, அதனை உயர் அழுத்த குழாய்கள் மூலம் திறந்துவிடும் வகையில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
 இந்நிலையில், அதில் பல்வேறு நிதி மோசடிகள் செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் இந்த விவகாரத்தை மாநில சட்டப் பேரவையில் எழுப்பினர். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
 இத்தகைய சூழலில், மாநில நிதியமைச்சர் யானைமலை ராமகிருஷ்ணடுவுடன் சந்திரபாபு நாயுடு தொலைபேசி வாயிலாக வியாழக்கிழமை உரையாடினார். அப்போது எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அவர் அதிருப்தி தெரிவித்தார். இதுதொடர்பாக மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 எதிர்க்கட்சியினர் மக்கள் நலனுக்காக ஒருபோதும் கவலைப்படுவதில்லை என்றும், அதேவேளையில் தம்மை பழிவாங்குவதில் மட்டும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதாகவும் சந்திரபாபு நாயுடு தொலைபேசி உரையாடலின்போது கூறினார். பட்டிசம் பாசனத் திட்டத்தில் எந்தத் தவறும் நடக்கவில்லை எனத் தெரிவித்த அவர், தனது வாழ்க்கையே ஒரு திறந்த புத்தகம் என்று கூறினார்.
 அப்போது குறுக்கிட்டுப் பேசிய நிதியமைச்சர், இதேபோன்று பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறி போலாவரம் திட்டத்தையும் எதிர்க்கட்சிகள் முடக்கிவிட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். அதற்கு உடனடியாக பதிலளித்த முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒருவேளை அத்தகைய சூழல் உருவானால், அதைச் சகித்துக் கொண்டு தாம் அமைதியாக இருக்கமாட்டேன் என்று கோபத்துடன் கூறினார். இவ்வாறு அந்தச் செய்திக் குறப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com