பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறேன்

பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சரத் யாதவ் தெரிவித்தார்.
பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறேன்

பாஜகவுக்கு எதிராக மகா கூட்டணி அமைக்க முயற்சித்து வருவதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி.யான சரத் யாதவ் தெரிவித்தார்.
 இது தொடர்பாக அவர் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னௌவில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
 சமூக நீதியை நிலைநாட்டவே நாட்டில் பெரிய போராட்டம் நடைபெறுகிறது. அதன் மூலம் மட்டுமே பாஜகவால் பரப்பப்படும் மதவாதத்தைத் தடுக்க முடியும். நான் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களைச் சந்திக்கிறேன். பாஜகவுக்கு எதிராக அடுத்த ஆண்டுக்குள் மகா கூட்டணி உருவாகிவிடும். அதற்காக நான் பாடுபட்டு வருகிறேன். பாஜகவின் சித்தாந்தம் மதவாதம் என்பதால் அக்கட்சிக்கு எதிராக பல்வேறு கட்சிகளையும் ஒன்றிணைக்க நான் முயற்சித்து வருகிறேன்.
 நான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது அக்கூட்டணி வாஜ்பாய் மற்றும் அத்வானியின் தலைமையின்கீழ் இருந்தது. அப்போது அக்கூட்டணிக்கு தேசிய செயல்திட்டம் இருந்தது. தற்போது அது மாறிவிட்டது. அந்த செயல்திட்டம் பிரித்தாளும் திட்டமாக மாறிவிட்டது. மத்தியில் தற்போது ஆளும் அரசானது மக்களை மதத்தின் பெயரால் பிரிக்கிறது.
 உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோயில்களைச் சுற்றி வருவது, அரசியல்சாசனத்துக்கு விரோதமான கருத்துகளை வெளியிடுவது ஆகியவற்றைமட்டுமே செய்து வருகிறார்.
 பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் எனது பங்கு குறித்துக் கேட்கிறீர்கள். முதலில் அது உருவாகட்டும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே எனது நோக்கம். நான் 11 முறை எம்.பி.யாக இருந்துள்ளேன். நான்கு முறை அப்பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். தற்போது எனது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளதால் எனக்கு நாடு முழுவதும் பயணிக்கவும், மக்களை ஒருங்கிணைக்கவும் அவகாசம் கிடைத்துள்ளது.
 கோரக்பூர் மற்றும் புல்பூர் மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சமாஜவாதி கட்சி, பாஜகவைத் தோற்கடித்தது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாநில முதல்வர் மற்றும் துணை முதல்வரின் தொகுதிகளில் சமாஜவாதி கட்சிக்கு கிடைத்துள்ள வெற்றி பெற்ற தகவல் நாடு முழுவதும் சென்றடைந்துள்ளது. மக்கள் தற்போது தங்களது சக்தியை உணர்ந்துள்ளனர்.
 அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியைச் சந்திக்கும். கடந்த முறை பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உத்தரப் பிரதேசம், பிகாரர், ஜார்க்கண்ட், மமேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில்தான் அதிகமான இடங்களைப் பெற்றன. இப்போது அந்த இடங்களில் அரசியல் நிலைமை மாறிவிட்டது. சமூகத்தின் எந்தப் பிரிவும் பாஜகவால் மகிழ்ச்சியாக இல்லை. இந்த முறை பாஜகவின் ஹிந்து-முஸ்லிம் செயல்திட்டம் எடுபடாது.
 பாஜக அரசியல் ஊழலில் ஈடுபட்டு வருகிறது. கோவாவிலும் மணிப்பூரிலும் காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் அங்கு பாஜக ஆட்சியமைத்தது. நாகாலாந்திலும் பாஜகதான் தனிப்பெரும் கட்சி. அங்கும் பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. அக்கட்சி அரசியல் கண்ணியத்தையும், தார்மீக நெறிகளையும் கைவிட்டு விட்டது. அரசமைப்பதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை மட்டுமே அக்கட்சியின் செயல்திட்டமாக உள்ளது என்றார் சரத் யாதவ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com