யாரைத்தான் நம்புவதோ? தனிநபர் விவரங்களை அமெரிக்கக் கம்பெனிக்குத் தாரை வார்த்த மோடி ஆப்??

இந்தியப் பிரதமரின் செயலி என அறிமுகப்படுத்தப்பட்ட நரேந்திர மோடி ஆப், அதில் பதிவு செய்யப்படும் தனி நபர் விவரங்களை அமெரிக்க கம்பெனிக்கு தாரை வார்த்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.
யாரைத்தான் நம்புவதோ? தனிநபர் விவரங்களை அமெரிக்கக் கம்பெனிக்குத் தாரை வார்த்த மோடி ஆப்??


புது தில்லி: இந்தியப் பிரதமரின் செயலி என அறிமுகப்படுத்தப்பட்ட நரேந்திர மோடி ஆப், அதில் பதிவு செய்யப்படும் தனி நபர் விவரங்களை அமெரிக்க கம்பெனிக்கு தாரை வார்த்ததாக ஆய்வுகள் கூறுகின்றன.

பிரெஞ்ச் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எல்லியட் ஆல்டெர்சன் இது குறித்த திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

நரேந்திர மோடி ஆப்பில் பதிவு செய்த நபர்களின் தனிப்பட்ட விவரங்களை அமெரிக்காவைச் சேர்ந்த க்ளெவர் டேப் என்ற தனியார் நிறுவனத்துக்கு, தனி நபர்களின் அனுமதியின்றி வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த குற்றச்சாட்டில், in.wzrkt.com என்ற தனியார் நிறுவனத்தின் டொமைனுக்கு அனைத்துத் தகவல்களும் பகிரப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், ஒரு தனி நபர் பயன்படுத்தும் செல்போனில் இருக்கும் ஆபரேடிங் சாஃப்ட்வேர், நெட்வொர்க் டைப் போன்றவற்றோடு, மின்னஞ்சல் முகவரி, புகைப்படங்கள், பாலினம், பெயர் உள்ளிட்டவையும், தனி நபர்களின் அனுமதியின்றி க்ளெவர் டேப் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி செயலியில் நீங்கள் கணக்குத் தொடங்கினால், உங்களது அனைத்துத் தகவல்களும் இந்த நிறுவனத்துக்கு சென்றுவிடும் என்கிறது ஆல்டெர்சன்னின் டிவிட்டர் பதிவு.

ஏற்கனவே, பேஸ்புக் தகவல்கள் கசிந்ததாக எழுந்த சர்ச்சை தீர்வதற்குள், இப்படி மோடியின் ஆப்பில் பதிவு செய்யும் தகவல்கள் அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கப்படும் தகவல் இந்திய மக்களை, 'யாரைத்தான் நம்புவதோ' என்ற பழைய பாடலைத் தேடிக் கேட்கத் தூண்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com