கால்நடைத் தீவன ஊழல் 4ஆவது வழக்கு: லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ஆவது வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து
கால்நடைத் தீவன ஊழல் 4ஆவது வழக்கு: லாலுவுக்கு 14 ஆண்டுகள் சிறை

கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 4ஆவது வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 ஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்த காலத்தில் செயல்படுத்தப்பட்ட கால்நடைத் தீவனத் திட்டத்தில் ரூ.900 கோடிக்கு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக லாலு பிரசாத் யாதவ், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ 5 வழக்குகளைப் பதிவு செய்தது.
 இதில், சாய்பாசா கருவூலத்தில் போலி ரசீதுகள் மூலம் ரூ.37.7 கோடி மோசடி செய்தது தொடர்பான முதலாவது வழக்கில் கடந்த 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாலு பிரசாத் தனது மக்களவை எம்.பி. பதவியை இழந்தார். மேலும் தேர்தலில் 6 ஆண்டுகளுக்கு போட்டியிடவும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் லாலு பிரசாத் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
 தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ.89.27 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான 2ஆவது வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த வழக்கில் லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, லாலு கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
 இதையடுத்து, சாய்பாசா கருவூலத்தில் ரூ.37.62 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பான 3ஆவது வழக்கில் கடந்த ஜனவரி மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது. அப்போது லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
 இந்நிலையில், தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பான 4ஆவது வழக்கு விசாரணை, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் முடிவடைந்தது. இதையடுத்து, ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 19-ஆம் தேதி லாலு பிரசாத் உள்ளிட்ட 19 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
 இதைத் தொடர்ந்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 19 பேருக்கான தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவ்பால் சிங் சனிக்கிழமை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: தும்கா கருவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், இந்திய தண்டனையியல் சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் லாலு பிரசாத்துக்கு விதிக்கப்படுகிறது. இதுதவிர ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. சிறைத் தண்டனைகளை லாலு அடுத்தடுத்து தொடர்ந்து அனுபவிக்க வேண்டும். அபராதத் தொகையை கட்ட முடியாமல் போகும்பட்சத்தில், லாலு மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
 முன்னாள் கால்நடைத் துறை பிராந்திய இயக்குநர் ஒ.பி. திவாகருக்கு தலா இரு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் (மொத்தம் 14 ஆண்டுகள்), ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. எஞ்சிய 17 பேரில்,
 9 கால்நடைத் துறை அதிகாரிகளுக்கும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பூல்சந்த்துக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
 கால்நடை தீவன விநியோகஸ்தர்கள் 7 பேருக்கு தலா மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று நீதிபதி அறிவித்தார்.
 மேல்முறையீடு-லாலு வழக்குரைஞர்: ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய லாலு தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லாலுவின் வழக்குரைஞர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.
 தோரண்டா கருவூலத்தில் ரூ.139 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக லாலுவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட 5ஆவது வழக்கு, ராஞ்சி சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
 கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 3ஆவது வழக்கில் தீர்ப்பு வெளியானதும் லாலு பிரசாத் கைது செய்யப்பட்டு ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து, கடந்த 3 மாதங்களாக சிறையில்தான் உள்ளார். இதனிடையே, லாலுவுக்கு கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால், ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். எனவே நீதிமன்றத்தில் அவர் சனிக்கிழமை நேரில் ஆஜராகவில்லை.
 அரசியல் சதி: பாஜக மீது ஆர்ஜேடி குற்றச்சாட்டு
 லாலுவுக்கு கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு பாஜக மீது ஆர்ஜேடி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது அரசியல் சதி என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து லாலு பிரசாத்தின் மகனும், பிகார் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியபோது, பாஜகவின் மேலாதிக்கத்தை லாலு எதிர்த்ததாலும், நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாலும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என சந்தேகிக்கிறோம் என்றார்.
 ஆர்ஜேடி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா கூறுகையில், "பாஜக போன்ற அரசியல் கட்சிகள் செய்த சதிக்கு லாலு பலிகடாவாகி விட்டார்' என்றார்.
 பாஜக மறுப்பு
 ஆர்ஜேடியின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
 இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், பிகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி கூறுகையில், "சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது; கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான வழக்குகளில் வெளியாகியுள்ள முதல் தீர்ப்பு அல்ல இது. இந்த தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்' என்றார்.
 
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com