காவிரி தீர்ப்பை செயல்படுத்த அமலாக்கக் குழு: மத்திய அரசுக்கு கர்நாடகம் யோசனை

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு "காவிரி அமலாக்கக் குழு' அமைக்கலாம் என கர்நாடக அரசு ஒரு செயல்திட்டத்தை, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு "காவிரி அமலாக்கக் குழு' அமைக்கலாம் என கர்நாடக அரசு ஒரு செயல்திட்டத்தை, மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
 காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16 -ஆம் தேதி இறுதித் தீர்ப்பை அளித்தது. அதில் , "காவிரியிலிருந்து கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்; இந்தத் தீர்ப்பை அமல்படுத்த ஏதாவதொரு செயல் திட்டத்தை (ஸ்கீம்) மத்திய அரசு கொண்டுவர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது. கூடுதலாக 14.75 டி.எம்.சி. தண்ணீரை ஒதுக்கியதை வரவேற்ற கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதை கடுமையாக எதிர்த்து வருகிறது.
 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்குவது குறித்து மார்ச் 9-ஆம் தேதி நடைபெற்ற தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் கூட்டத்தில், நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்குவது குறித்த செயல்திட்டத்தை பரிந்துரைக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கர்நாடக அரசின் செயல்திட்டத்தை முன்மொழிந்து, மத்திய அரசின் நீர்வளத் துறை செயலர் யூ.பி.சிங்குக்கு அந்த மாநில தலைமைச் செயலர் கே.ரத்னபிரபா கடிதம் எழுதியுள்ளார்.
 அக்கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது:
 காவிரி வழக்கின் தீர்ப்பை அமலாக்க மாநிலங்களுக்கு இடையிலான ஆற்றுநீர் சிக்கல்கள் சட்டம் 1956 பிரிவு -6(ஏ) -இன்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான செயல் திட்டம் (ஸ்கீம்) வகுக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது.
 "இந்த செயல் திட்டம், காவிரி நடுவர் மன்றம் தெரிவித்துள்ளபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது' என தமிழக தலைமைச் செயலர் கூறியுள்ளது சட்டத்தின் தீர்ப்புக்கு முரணானதாகும். மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடுவர் மன்றம் வழிகாட்டவில்லை. மாறாக, பரிந்துரைத்துள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ன
 நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ளதுபோல மேலாண்மை அல்லது ஒழுங்காற்று வாரியம் அமைப்பதை எதிர்ப்பதால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்க செயல்திட்டத்தை வகுக்க
 கர்நாடக அரசைக் கேட்பது சரியல்ல.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானதாகும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தனது தீர்ப்பின்மூலம் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளிக்கவில்லை.
 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்கும் நோக்கத்தோடு "காவிரி முடிவு அமலாக்கக் குழு' அமைக்கலாம். இந்த குழு, உண்மை நிலவரத்தின் அடிப்படையில் பேரிடர் காலத்தில் ஆற்றுநீர்ப் பகிர்வளவை நிர்ணயிக்கலாம். மழை நிலவரம், நீர் இருப்பு, நிலத்தடி நீர் குறித்த தரவுகளை சேகரிக்க கண்காணிப்பு முகமையை இக்குழுவின்கீழ் அமைக்கலாம். இந்த தரவுகளை சரிபார்க்க வல்லுநர் குழுவையும் இக்குழுவின்கீழ் அமைத்துக் கொள்ளலாம்.
 நடுவர் மன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்ததன் மூலம் தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்கள் சாதாரண ஆண்டில் இரு மாநில எல்லையில் அமைந்துள்ள பிலிகுண்டலு நீர் அளவை நிலையத்தில் இருந்து ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை பெறுவதில் மட்டுமே வரையறுக்கப்படுகிறது.
 பேரிடர் ஆண்டில் உண்மை நிலவரங்களின் அடிப்படையில் தண்ணீர் பகிர்வு அமைந்திருக்கலாம். காவிரி ஆற்றில் கர்நாடகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 740 டி.எம்.சி.
 தண்ணீரை கர்நாடக அரசு எப்படி பயன்படுத்துகிறது, எங்கு சேமிக்கிறது, தனது எல்லைக்குள்பட்ட உபரிநீரை எப்படி கையாள்கிறது போன்றவற்றில் தனது உரிமை அல்லது நலன் பற்றி பிரச்னை கிளப்ப தமிழக அரசுக்கு உரிமையில்லை.
 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, பிரச்னைக்கான தீர்வு அமைப்பை வலியுறுத்துகிறதே அன்றி, மேலாண்மை அமைப்பை அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்க நிலையில் தான் ஒழுங்காற்று ஆணையம் செயல்பட முடியும். அதாவது ஒழுங்காற்று ஆணையம் அமலாக்க உத்தரவிடலாம் அவ்வளவே. பேரிடர் ஆண்டில் 740 டி.எம்.சி.-ஐ விட குறைந்தளவு தண்ணீர் இருந்தால், அதற்கு தகுந்தபடி பேரிடர் நீர்ப் பகிர்வு அளவை நிர்ணயிக்கலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com