நீரவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை: ரூ.26 கோடி மதிப்பு சொத்துகள் பறிமுதல்

கடன் ஏய்ப்பு மோசடியில் சிக்கியுள்ள தொழிலதிபர் நீரவ் மோடிக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் அமலாக்கத் துறையினர்

கடன் ஏய்ப்பு மோசடியில் சிக்கியுள்ள தொழிலதிபர் நீரவ் மோடிக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூ.26 கோடி மதிப்பிலான பழமையான நகைகள், புகழ் பெற்ற ஓவியங்கள், விலை உயர்ந்த கைக் கடிகாரங்கள் உள்ளிட்டவற்றை அவர்கள் பறிமுதல் செய்தனர்.
 பஞ்சாப் நேஷனல் வங்கியிடம் இருந்தும், அதன் பெயரைப் பயன்படுத்தி வேறு சில வங்கிகளிடம் இருந்தும் தொழிலதிபர் நீரவ் மோடி ரூ.12,717 கோடி கடன் பெற்று, அதைத் திருப்பிச் செலுத்தவில்லை. தற்போது விசாரணை நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக அவர் வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்புடைய நீரவ் மோடியின் உறவினர் மெஹுல் சோக்ஸியும் இந்தியாவில் இருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
 இதையடுத்து, அவர்கள் இருவருக்கு எதிராகவும் பிணையில் வெளி வர இயலாத பிடி ஆணையை மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. மேலும், அவர்களைக் கைது செய்ய சர்வதேசக் காவல் (இன்டர்போல்) உதவியையும் மத்திய அரசு நாடியுள்ளது.
 இதனிடையே, அவர்கள் இருவருக்கும் சொந்தமான வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி, இதுவரை 247 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன. சுமார், ரூ.7,638 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
 இந்நிலையில், கடந்த சில நாள்களாக மும்பையின் வொர்லி பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அமலாக்கத் துறையினர், சிபிஐ உதவியுடன் சோதனை நடத்தினர். அப்போது ரூ.10 கோடி மதிப்பிலான பழமையான நகைகள், உலகப் புகழ் பெற்ற கலைஞர்களான எம்.எஃப்.ஹுசைன், அம்ரிதா ஷேர் - கில், கே.கே.ஹேப்பர் உள்ளிட்டோர் வரைந்த ரூ.15 கோடி மதிப்பிலான ஓவியங்கள், ரூ.1.4 கோடி மதிப்பிலான கைக் கடிகாரங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்தத் தகவலை அமலாக்கத் துறை வட்டாரங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com