பாஜகவின் மரபணு முழுவதும் பொய்கள் நிரம்பியுள்ளன: காங்கிரஸ் தாக்கு

பாஜகவின் மரபணு முழுவதும் பொய்கள் நிரம்பியிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

பாஜகவின் மரபணு முழுவதும் பொய்கள் நிரம்பியிருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
 மத்திய அரசுக்கு எதிராக பொய்களை பரப்பும் செயலில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த குற்றச்சாட்டுக்கு, இவ்வாறு அக்கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
 இதுகுறித்து தில்லியில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாம் வடக்கன் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
 வெற்று வாக்குறுதிகளை மட்டுமே மத்திய அரசு தெரிவிக்கிறது. அவை அனைத்தும் சுத்த பொய்கள் ஆகும். இந்த வெற்று வாக்குறுதிகள் அனைத்தும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் இருந்து மத்திய அரசு வாங்கியுள்ளது.
 தற்போது யாருக்கு உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று மக்களிடம் கேட்டால், மத்திய அரசிடம்தான் உண்மைக் கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என அவர்கள் தெரிவிப்பார்கள். ஏனெனில், பொய்களை தெரிவிப்பதில் அனைத்து எல்லைகளையும் மத்திய அரசு கடந்து விட்டது.
 நாட்டு மக்களிடம் மத்திய அரசு தொடர்ந்து பொய்களை தெரிவித்து வருகிறது. குறிப்பாக, இராக்கில் இந்தியர்கள் 39 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பொய்களையே தெரிவித்தது.
 நீதித்துறை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தைச் சேர்ந்த 4 மூத்த நீதிபதிகள் வெளிப்படையாக வந்து தங்களது கவலையை தெரிவித்தனர். நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுவிட்டது. ரஃபேல் போர் விமானம் ஒப்பந்தம் தொடர்பாக நாட்டு மக்களிடம் மத்திய அரசு பொய்களை தெரிவித்துள்ளது.
 தில்லியில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டம் தொடர்பான செய்தியை சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரை தில்லி போலீஸார் துன்புறுத்தியுள்ளனர்.
 இதில் இருந்து, மத்தியில் ஆட்சியில் இருப்போரின் (பாஜக), மரபணு முழுவதும் பொய்கள் நிரம்பியிருப்பதை தெரிந்து கொள்ளலாம்.
 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடக்கும் பிரேத பரிசோதனை (பொதுத் தேர்தலில்), மத்திய அரசிடம் இருந்தவை அனைத்தும் பொய்களே என்பதை தெரியப்படுத்தும் என்றார் டாம் வடக்கன். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பேசியபோது தேர்தல்களில் அடையும் தொடர் தோல்வியால் காங்கிரஸ் கட்சி விரக்தியில் இருப்பதாகவும், இதனால் மத்திய அரசுக்கு எதிராக பொய்களை பரப்பும் செயலில் அக்கட்சி ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
 இதேபோல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும், நாடாளுமன்ற முட்டுக்கட்டைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தான் காரணம் என புகார் தெரிவித்திருந்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com