ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி-க்கள் ராஜிநாமா முடிவு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்தால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி-க்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி-க்கள் ராஜிநாமா முடிவு

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரம் தொடர்பாக அம்மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக அழுத்தம் கொடுத்து வருகின்றன. முதலாவதாக தெலுங்கு தேசம் கட்சி, மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் நாடாளுமன்றத்தை பல்வேறு கட்சிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முடக்கி வருவதால் இந்த தீர்மானம் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விடுமுறை தினங்களுக்குப் பிறகு இரு அவைகளும் வருகிற செவ்வாய்கிழமை மீண்டும் கூடுகிறது. அப்போது மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த பட்ஜெட் மீதான கூட்டத்தொடர் ஏப்ரல் 5-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அதற்குள்ளாக ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இல்லையெனில் தங்கள் கட்சி எம்பி-க்கள் ராஜிநாமா செய்வார்கள் என்று அக்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தற்போது ஆந்திர மாநிலம் முழுவதும் பாதயாத்திரை நடத்தி வரும் ஜெகன் மோகன் ரெட்டி குண்டூர் மாவட்டத்தில் தனது கட்சி எம்பிக்களுடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்ததாவது:

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். இல்லையென்றால் கடைசி நாளன்று ஒய்எஸ்ஆர் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வார்கள். பாஜக- டன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது. வருகிற தேர்தல்களை நாங்கள் தனித்து சந்திக்க தயாராக உள்ளோம். இருப்பினும் இடதுசாரிகளுக்கு எங்கள் அழைப்பு எப்போதும் உண்டு. இவ்விவகாரத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். இதன்மூலம் மத்திய பாஜக அரசுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com