என்னை சிறையில் அடைத்துவிட்டு பிகாரில் பாஜக வன்முறையை ஏற்படுத்துகிறது: லாலு பிரசாத் யாதவ்

தன்னை சிறையில் அடைத்துவிட்டு பிகார் முழுவதும் பாஜக வன்முறையை ஏற்படுத்தி வருவதாக லாலு பிரசாத் யாதவ் வியாழக்கிழமை குற்றம்சாட்டினார்.
என்னை சிறையில் அடைத்துவிட்டு பிகாரில் பாஜக வன்முறையை ஏற்படுத்துகிறது: லாலு பிரசாத் யாதவ்

ஒருங்கிணைந்த பிகார் மாநில முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது, கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவது தொடர்பான திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ.900 கோடி ஊழல் புரிந்ததாக லாலு பிரசாத், முன்னாள் முதல்வர் ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

கால்நடைத் தீவன ஊழல் முதலாவது வழக்கில் லாலுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2-ஆவது வழக்கில் மூன்றரை ஆண்டுகளும், 3-ஆவது வழக்கில் 5 ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டன. 

4-ஆவது வழக்கில் 14 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லாலு பிரசாத் யாதவுக்கு இதுவரை 27.5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தன்னை சிறையில் அடைத்துவிட்டு பிகார் முழுவதும் பாஜக வன்முறையை ஏற்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

என்னை சிறையில் அடைத்துவிட்டு பிகார் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். இதனால் பிகார் முழுவதும் வன்முறை ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மாநிலத்தையும் பாஜக சீரழித்து வருகிறது. மாநில முதல்வராக நிதிஷ்குமாரின் நிலையும் இதோடு முடிவடைந்துவிட்டது. தற்போது எனது உடல்நிலை சரியாக இல்லை என்றார்.

முன்னதாக, மார்ச் 17-ஆம் தேதி பிகாரில் உள்ள பகல்பூர் எனுமிடத்தில் கலவரம் ஏற்பட்டது. இதற்கு மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபேவின் மகன் அர்ஜித் சாஷ்வந்த் மற்றும் பாஜக, ஆர்எஸ்எஸ், ஐக்கிய ஜனதா தளம் தான் முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த கலவரம் தொடர்பாக சாஷ்வந்த் உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தாலும், அவர்களை வேண்டுமென்றே கைது செய்யாமல் இருப்பதாக ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com