போதைப் பொருள் தடுப்பு: இந்தியா - இலங்கை ஆலோசனை

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பரஸ்பரம் நல்கி வரும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். 

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் பரஸ்பரம் நல்கி வரும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்திய, இலங்கை அதிகாரிகள் தில்லியில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர். 
இரண்டு நாள்கள் நடைபெறக் கூடிய இந்தக் கூட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடைகிறது.
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் இணைந்து செயல்படுவது என இந்தியா - இலங்கை இடையே கடந்த 2013-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இதன்படி, மூன்றாவது இருதரப்பு ஆலோசனைக் கூட்டம் தில்லியில் நடைபெற்று வருகிறது.
இலங்கை சார்பில், அந்நாட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை ஆய்வாளர் சஞ்சீவா மேதாவத் தலைமையிலான குழு ஆலோசனையில் பங்கேற்றுள்ளது. இதேபோல், இந்திய தரப்பில், போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறையின் இயக்குநர் அபே தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதுகுறித்து இந்திய அதிகாரி ஒருவர் கூறுகையில், போதைப் பொருள் கடத்தலில் அண்மைக்கால உத்திகள், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தப்படுவது குறித்த உளவு தகவல்களை பகிர்வது உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
கடத்தல்காரர்கள் போதைப் பொருளை கடத்தும்போது, தெரிந்தே அதை அனுமதித்து, கையும் களவுமாக பிடிக்கும் உத்தி தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுபோன்ற உத்திகள் மற்றும் கைதான நபர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வது குறித்து இரு நாட்டு பிரதிநிதிகள் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த ஆண்டில், போதைப்பொருள் கடத்தியதாக இலங்கையைச் சேர்ந்த, மொத்தம் 6 நபர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்தனர். 
அவர்களிடம் இருந்து ஹெராயின், கஞ்சா, கொகைன் உள்ளிட்ட 95 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com