திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி?: தொல்லியல் துறை கடிதத்தால் சர்ச்சை 

மத்திய தொல்லியல் துறையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றினால், கோவில் நிர்வாகத்தை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தை மத்திய அரசு கைப்பற்ற முயற்சி?: தொல்லியல் துறை கடிதத்தால் சர்ச்சை 

திருப்பதி: மத்திய தொல்லியல் துறையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றினால், கோவில் நிர்வாகத்தை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலம், திருப்பியில் உள்ள ஏழுமலையான் கோயில் நாட்டிலேயே அதிக சொத்து கொண்டதாகவும், வருவாய் அதிகம் உள்ள கோயிலாவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலானது ஆந்திர மாநில அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வாயிலாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

திருமலையில் உள்ள பழங்கால கட்டடங்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும், கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து, மாற்றங்கள் செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருந்தது. அத்துடன் பக்தர்கள் வழங்கும் விலை மதிப்புமிக்க காணிக்கைகள் உரிய பாதுகாப்புடன் வைக்கப்படவில்லை, பழங்காலத்தில் மன்னர்கள், பேரரசர்கள் வழங்கிய ஆபரணங்கள் கூட பாதுகாப்பாக இல்லை என்று பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரி போராட்டங்களும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய தொல்லியல் துறையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் ஒன்றினால், கோவில் நிர்வாகத்தை மத்திய அரசு கைப்பற்ற முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அந்த கடிதத்தில் திருப்பதி கோயிலின் தொன்மையான வரலாற்று சிறப்பு மிக்க, கட்டடங்களை தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடைத்து, மாற்றங்கள் செய்வது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது.மேலும் அந்த கோயிலில் நடந்துள்ள கட்டுமானப் பணிகள் குறித்த விவரங்களையும் அளிக்குமாறு கோரியுள்ளது.

இதைத் தொடர்ந்து திருப்பதி கோயிலை பாரம்பரிய சின்னமாக அறிவித்து மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு, ஆந்திர மாநில அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் ஆந்திர மாநில பாஜக எம்.பி. நரசிம்ம ராவ் , 'திருப்பதி கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தொன்மையான கட்டடங்கள் நிறைந்த கோயில் என்பதால் அங்குள்ள கட்டட விவரங்களை மட்டுமே தொல்லியல் துறை கேட்டுள்ளது' என்று அவர் கூறியுள்ளார்.

இதனிடையே முக்கிய திருப்பமாக திருப்பதி கோயிலை கையகப்படுத்தப் போவதாக வெளியான தகவல்களை மத்திய தொல்லியல் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. அத்துடன் சர்ச்சைக்குரிய கடிதத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com