தில்லி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தானில் புழுதிப்புயல் கோரத்தாண்டவம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

வறண்ட அல்லது பகுதி-வறண்ட பகுதிகளில் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது காற்று மண்டலத்தின் வேகம்
தில்லி, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தானில் புழுதிப்புயல் கோரத்தாண்டவம்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை 

புதுதில்லி: தலைநகர் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட பல மாநிலங்களில் புழுதிப்புயலின் தாக்கம் தொடங்கியுள்ளதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வட இந்தியா, கிழக்கு இந்தியாவின் பரவலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், புழுதிப் புயலும் இன்று செவ்வாய்க்கிழமை வீச வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. 

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட இந்தியா, கிழக்கு இந்தியாவின் பரவலான பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், புழுதிப் புயலும் இன்று செவ்வாய்க்கிழமை வீச வாய்ப்புள்ளது. ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, புழுதிப் புயல் ஆகியவை வீச வாய்ப்புள்ளது. ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா, சண்டீகர், தில்லி, உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதி, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும், புழுதிப் புயலும் வீசக்கூடும்.

பஞ்சாப், அஸ்ஸாம், மேகாலயம், நாகாலாந்து, மணிப்பூர், மிúஸாரம், திரிபுரா, பிகார், மத்தியப் பிரதேசத்தின் மேற்கு பகுதி, உத்தரப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதி, ராஜஸ்தானின் கிழக்குப் பகுதி, கடலோர கர்நாடகம் மற்றும் தெற்கு கர்நாடக பகுதிகள், தமிழகம், கேரளம் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை, குளிர்ந்த காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

தமிழகத்தின் சில பகுதிகளிலும், தெற்கு கர்நாடக பகுதி, கேரளம் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளது. 

புழுதிப் புயல் என்றால் என்ன? புழுதிப் புயல் எனப்படுவது வறண்ட அல்லது பகுதி-வறண்ட பகுதிகளில் ஏற்படும் ஒரு வானியல் நிகழ்வாகும். இது காற்று மண்டலத்தின் வேகம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை விட அதிகரிக்கும் போது மணல் மற்றும் தூசிகளை வறண்ட நிலங்களில் இருந்து அகற்றி தன்னுடன் எடுத்துச் செல்வதால் ஏற்படுவது.

13 மாநிலங்களில் புழுதி புயல் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தில்லி, சண்டிகர், ஹரியாணா மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த புயல் தாக்கி வருகிறது. தலைநகர் தில்லி, சண்டிகரை நள்ளிரவு முதல் புயல் தாக்க தொடங்கியுள்ளது. தில்லி பல பகுதிகளில் இடி, மிண்டலுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மின்சாரம் தடைப்பட்டதால் தில்லி மாநகரம் இருளில் மூழ்கியது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் கன மழை பெய்து வருகிறது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான், தில்லி, ஹரியாணா ஆகிய 3 மாநிலங்களுக்கும் அடுத்த 48 மணி நேரத்தில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. தில்லி, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ரயில் இயக்கப்படும் என்று தில்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

90 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால், மெட்ரோ ரயில் பிளாட்பார்மில் நிறுத்திவைக்கப்படும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 
 
பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநிலங்களின் மீட்பு அணியினர் தயாராக வைக்கப்பட்டுள்ளனர். சாலைகளில் பயணிப்பதை பெரும்பாலும் தவிர்க்குமாறு, போக்குவரத்து போலீஸார், பொதுமக்களை கேட்டுக்கொண்டிருக்கின்றனர். புழுதி புயலின்போது, காற்றின் வேகம் படிப்படியாக அதிகரித்து, மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2 தினங்களுக்கு முன் உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் இரவு திடீரென புழுதி புயல் வீசியது. இதைத்தொடர்ந்து இடியுடன் பலத்த மழையும் பெய்தது. புயல்காற்றில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தற்போது மீண்டும் புழுதிப் புயல் வீசி வருவதால் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com