வங்காளத்தில் கேள்விதாள் இல்லை: நீட் தேர்வு குறித்து ஜாவடேகருக்கு மம்தா கடிதம்

நீட் தேர்வு ஒருங்கிணைப்பில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள். முடிந்தால் மறுதேர்வுக்கு ஏற்பாடு செய்யுங்கள், கடிதத்தில் மம்தா வலியுறுத்தல்.
வங்காளத்தில் கேள்விதாள் இல்லை: நீட் தேர்வு குறித்து ஜாவடேகருக்கு மம்தா கடிதம்

நாடு முழுவதிலும் மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) மே 6-ஆம் தேதி நடைபெற்றது. இதில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். சிபிஎஸ்இ இந்த தேர்வை நடத்தியது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நீட் தேர்வு தொடர்பாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு கடிதம் எழுதினார். அதில் அவர் குறிப்பிட்டதாவது:

நீட் தேர்வு நடத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் கூட்டாக செயல்பட வேண்டியது அவசியம். இதில் சரியான ஒருங்கிணைப்பு இருந்தால் மட்டுமே சிறப்பாக செயல்படுத்த முடியும். ஆனால், இம்முறை மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் பல குளறுபடிகள் நடந்துள்ளன.

பல தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வங்காள மொழியில் கேள்வித்தாள் வழங்கப்படவில்லை. மாறாக ஆங்கிலம், ஹிந்தி கேள்வித்தாள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. வங்காள மொழியில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களை அதை கொண்டு தேர்வு எழுத கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். சில இடங்களில் வங்காள மொழி கேள்வித்தாள்கள் குறைவாக இருந்ததால் அதன் பிரதி மட்டுமே பல மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களால் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிரமம் அதிகரித்துள்ளது. 

இந்த குளறுபடிகளுக்கு காரணமான அனைத்து அதிகாரிகளின் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முடிந்தால் மறு தேர்வு வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். நீட் தேர்வுக்கு ஒருங்கிணைக்கும் அதிகாரிகள் துரிதமாக செயல்பட வேண்டும். ஏனென்றால் இது மாணவர்களின் எதிர்காலம். அது எவ்வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com