திறந்தநிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்

திறந்தநிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதிகாண் தேர்வு ( நீட்) எழுத முடியாது என்று சிபிஎஸ்இ வகுத்துள்ள விதி சட்டவிரோதமானது
திறந்தநிலை பள்ளியில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும் 'நீட்' தேர்வு எழுதலாம்

திறந்தநிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதிகாண் தேர்வு ( நீட்) எழுத முடியாது என்று சிபிஎஸ்இ வகுத்துள்ள விதி சட்டவிரோதமானது என்று கூறி, அந்த விதியை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 
இதன்படி திறந்தநிலை பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இனிமேல் 'நீட்' தேர்வு எழுதலாம். நீட் தேர்வு எழுத இந்திய மருத்துவ கவுன்சில் தற்போது விதித்துள்ள வயது வரம்பில் மாற்றம் இல்லை என தில்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுதுவதற்கு வயது வரம்பை இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்ணயம் செய்துள்ளது. இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. கடந்த ஜனவரி மாதம் 22-ஆம் தேதி ஓர் அறிவிக்கை வெளியிட்டது, அதில், நீட் தேர்வு எழுத பொதுப் பிரிவினருக்கு 25 வயது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 30 வயது என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இந்த வயது வரம்பு அறிவிக்கைக்கு தடை விதிக்கக் கோரி கேரளத்தைச் சேர்ந்த பினு, மோகித்குமார் உள்ளிட்டோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கை கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், நீட் தேர்வு வயது வரம்பு தொடர்பான சி.பி.எஸ்.இ. அறிவிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, சந்தர் சேகர் அமர்வு வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு: 
தேசிய திறந்தநிலை பள்ளி அல்லது அங்கீகரிக்கப்பட்ட திறந்தநிலை பள்ளி வாரியத்தில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாது என்ற சிபிஎஸ்இ வகுத்துள்ள சட்டவிரோதமான விதியை ரத்து செய்கிறோம். இனி தேசிய திறந்தநிலை பள்ளி அல்லது அங்கீகரிக்கப்பட்ட திறந்தநிலை பள்ளி வாரியத்தில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவர்கள் அல்லது தேர்வர்கள் நீட் தேர்வு எழுத தகுதி பெற்றவர்களாவர். இவ்வாறு திறந்தநிலை பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதியிருந்தால் பிற மாணவர்களுடன் அவர்களுடையே நீட் தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டும்.
நீட் தேர்வு எழுதும் பொதுப்பிரிவினருக்கு வயது வரம்பு 25, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் உள்ளிட்ட இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கான வயது வரம்பு 30 என்ற விதி சட்டப்படி செல்லும். இந்த வயது வரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.
நீட் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் அளித்துள்ள விளக்கம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதால், இது தொடர்பாக எவ்வித வாதங்களும் முன் வைக்கப்படவில்லை. எனவே, நீட் தேர்வு எழுதும் தனித் தேர்வர்கள் தொடர்பாக எதையும் தீர்மானிக்கவில்லை என்று உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com