கர்நாடகாவிலும் 'கூவத்தூர் பார்முலா'?: கேரள சுற்றுலாத்துறையின் ட்வீட்டால் பரபரப்பு! 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் 'கூவத்தூர் பார்முலா' கர்நாடகாவிலும் அரங்கேற உள்ளதா என்ற சந்தேகம்... 
கர்நாடகாவிலும் 'கூவத்தூர் பார்முலா'?: கேரள சுற்றுலாத்துறையின் ட்வீட்டால் பரபரப்பு! 

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் 'கூவத்தூர் பார்முலா' கர்நாடகாவிலும் அரங்கேற உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது      

கடந்த 12- ஆம் தேதி  நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் செவ்வாயன்று வெளியாகின. இதில் அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தாலும்,  ஆட்சியமைக்கும் அளவுக்கு பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்த சூழ்நிலையை பயன்படுத்தி, மதசார்பற்ற ஜனதா தள கட்சி ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதன் மூலம் தேவேகௌடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதல்வராகும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

ஆட்சி அமைப்பது தொடர்பாக மதச் சார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவேகௌடாவுடன், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கூட்டணி ஆட்சிக்கு தேவேகௌடாவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

தொடர்ந்து மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி, கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகிய மூவரும் கூட்டாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முன்னதாக குமாராசாமி ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். செய்தியாளர்கள் சந்திப்பில் மதச் சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாராசாமி பேசும் பொழுது ‘ஆட்சியமைக்க உரிமை கோரும் கடிதத்துடன், காங்கிரசின் ஆதரவு கடிதத்தையும் கொடுத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

அதேசமயம் பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பாவும் ஆளுரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.அவருக்கு ஆளுநர் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.     

இந்நிலையில் தமிழ்நாட்டின் 'கூவத்தூர் பார்முலா' கர்நாடகாவிலும் அரங்கேற உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர், சசிகலா அணியினைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டு 'பத்திரமாக' பாதுகாக்கப்பட்டனர்.

அதேபோல் தற்பொழுது கர்நாடகாவில் ஆட்சியமைப்பதை தீர்மானிக்கப்போகும் சக்தியாக மதச் சார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏக்கள் விளங்க உள்ளனர். எனவே அவர்களை ஆட்சி அமைக்கும் பணிகள் நிறைவடையும் வரை, பாதுகாப்புடன் வைத்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது கர்நாடக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வந்து ரிஸார்ட்டுகளில் தங்கி இருக்க அழைக்கிறோம் என்று கேரளா மாநில சுற்றுலாத்துறையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடபட்டிருக்கும் தகவல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இதுதொடர்பாக கேரளா மாநில சுற்றுலாத்துறையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் தகவல் பின்வருமாறு:

கர்நாடக தேர்தல் தொடர்பான தற்போதைய அனைத்து கடின சூழ்நிலைகள் மற்றும் பல்டிகளுக்குப் பிறகு,  'கடவுளின் சொந்த தேசம்' என்று அழைக்கப்படும் கேரளாவில் உள்ள பாதுகாப்பான மற்றும் அழகான ரிஸார்ட்டுகளுக்கு, எம்.எல்.ஏக்களை அழைக்கிறோம்

இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com