பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு: 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடு: 2வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சிபிஐ


பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி முறைகேடாக கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் இரண்டாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் மெஹுல் சோக்ஸி உள்ளிட்ட 17 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இருந்து முறைகேடாக கடன் உறுதிச் சான்றிதழ்கள், வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இருந்து கடன் பெறுவதற்கான சான்றிதழ்கள் ஆகியவற்றை பெற்று வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் ரூ.13,492 கோடியை நீரவ் மோடியும், அவரது உறவினர்களும் கடனாகப் பெற்றனர். அதனை திருப்பிச் செலுத்தாமல் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களுக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

அந்த வழக்கில் நீரவ் மோடி, அவரது சகோதரர் நிஷால் மோடி, நீரவ் மோடி நிறுவனத்தின் அதிகாரி துபாஷ் பராப் ஆகியோருக்கு எதிராக மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த வாரம் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

முன்னதாக, கடந்த நிதியாண்டின் (2017-18) நான்காவது காலாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த கடன் உறுதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களைச் சமர்ப்பித்து வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் இருந்து நீரவ் மோடி பெற்ற கடன் தொகைக்கான முதல் தவணை ரூ.6,586 கோடியை செலுத்திவிட்டோம்.

அடுத்த தவணைத் தொகை ரூ.6,959 கோடியை செலுத்திவிடுவோம். நீரவ் மோடி வாங்கிய கடன்தொகைக்கு வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டால் இன்றைய நிலையில் ரூ.14,356 கோடியாக உள்ளது. அதில், முதல் தவணை ரூ.7,178 கோடியை திரட்டிவிட்டோம். அடுத்த 3 காலாண்டுகளுக்குள் எஞ்சியுள்ள ரூ.7,178 கோடியை திரட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com